காஷ்மீரில் ஹிஜாப் அணிந்த மற்றும் பொட்டு வைத்த மாணவிகள் மீது ஆசிரியர் தாக்குதல் நடத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு – காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் நிசார் அகமது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு 4-ம் வகுப்புக்கு பாடம் எடுக்கச் சென்ற அவர், அங்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவியை அழைத்துள்ளார். பின்னர் அவரிடம் ஏன் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் உடையை அணிந்து வந்துள்ளாய் எனக் கேட்டு சரமாரியாக தாக்கியுள்ளதாக புகார் கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்த வகுப்பில் உள்ள இந்து மாணவி ஒருவரை, ஏன் பொட்டு வைத்திருக்கிறாய் எனக் கேட்டும் அடித்ததாக தெரிகிறது. இதுகுறித்து அந்த மாணவிகள், தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவிகளின் பெற்றோர், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், இதுதொடர்பாக அந்த மாணவிகளின் தந்தையர் இருவரும் சமூக வலைதளத்தில் வீடியோவையும் வெளியிட்டனர்.
அதில், “இரு பிஞ்சுக் குழந்தைகளை எந்தக் காரணமும் இல்லாமல் ஆசிரியர் நிசார் அகமது கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். வேண்டுமென்றே மதப் பிரச்சினையை தூண்டிவிடும் விதமாக அவரது செயல் அமைந்துள்ளது. இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு அவர் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களை போல ஹிஜாப் பிரச்சினை காஷ்மீரிலும் ஊடுருவ நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்றனர்.
முதல்கட்டமாக, ஆசிரியர் நிசார் அகமதுவை சஸ்பெண்ட் செய்து ரஜோரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அவர் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM