புதுடில்லி-உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், 101 வகையான ஆயுதங்கள், தளவாடங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பட்டியலை ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று வெளியிட்டார்.
முப்படைகளுக்கு தேவையான ஆயுதங்கள், தளவாடங்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்தே வாங்கப்பட்டு வந்தன. முன்னுரிமைமத்தியில் பா.ஜ., அரசு அமைந்த பின், இவற்றை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முன்னுரிமை தரப்பட்டு வருகிறது.உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், சில ஆயுதங்கள், தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, கடந்த, 2020 ஆக.,ல் முதல் முறையாக, 101 ஆயுதங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடந்தாண்டு மே மாதத்தில், 108 ஆயுதங்களுக்கு தடை விதித்து இரண்டாவது பட்டியல் வெளியிடப் பட்டது.இந்நிலையில், மூன்றாம் கட்டமாக, 101 ஆயுதங்கள், தளவாடங்களுக்கான தடை பட்டியலை, பா.ஜ., மூத்த தலைவரும் ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் நேற்று வெளியிட்டார்
.ஒத்துழைப்பு
சென்சார்கள், கடற்படைக்கான ஹெலிகாப்டர், ரோந்து வாகனங்கள், கப்பல்களை தகர்க்கக் கூடிய ஏவுகணைகள் உள்ளிட்டவை இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதை வெளியிட்டு ராஜ்நாத் சிங் கூறியதாவது:அடுத்த ஐந்த ஆண்டுகளில், 9.88 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆயுதங்கள், தளவாடங்கள் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஆயுதங்களுக்காக வெளிநாடுகளை சார்ந்திருப்பதை தவிர்க்கும் வகையில், உள்நாட்டிலேயே அவற்றை உற்பத்தி செய்ய முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், 1.75 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கான ஆயுதங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துஉள்ளோம்.ராணுவத் துறையில் தற்சார்பு நிலையை எட்டுவது, ஏற்றுமதியை ஊக்குவிப்பது ஆகியவையே இந்த அரசின் முக்கிய நோக்கமாகும்.உள்நாட்டில் தனியார் நிறுவனங்கள் வாயிலாகவும் உற்பத்தி நடந்து வருகிறது. அதே நேரத்தில் இதில், வெளிநாடுகளின் பங்களிப்பு, ஒத்துழைப்பும் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.