சென்னை: தமிழகத்தில் 2023-ம் ஆண்டு இறுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடுநடத்தப்படும் என்று முதல்வர்மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.விரைவில் சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்காவில் முதலீட்டாளர்களை சந்திக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பேசியதாவது:
தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை அரசு படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, ரூ.68,375 கோடி முதலீட்டில் 2 லட்சத்து 5,802 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 130 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் 26, 28-ம் தேதிகளில் துபாய் மற்றும் அபுதாபியில் ரூ.6,100 கோடி முதலீடும், 15,100 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் வகையில் 14 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் இந்த முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
துபாய் உலக கண்காட்சியின் இறுதி வாரங்களில்தான் பெரிய முதலீட்டாளர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், துபாய் சென்று, மார்ச் 25-ம் தேதி தமிழ்நாடு அரங்கை திறந்து வைத்தேன். புலம் பெயர் தமிழர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தேன்.
முபாதலா முதலீட்டு நிறுவனம், ஏபிக்யூ நிறுவனங்களின் முதலீடுகளை பெற ஒரு பணிக்குழு விரைவில் அமைக்கப்பட உள்ளது. அபுதாபியைச் சேர்ந்த எஃகு குழாய் உற்பத்தி நிறுவனம் ஒன்றுடன் ரூ.1,000 கோடி முதலீடும், 2 ஆயிரம் பேருக்கு வேலை ஏற்படுத்தும் வகையிலும், இரு பெரும் வணிக வளாகங்கள், உணவு பதப்படுத்தக்கூடிய திட்டத்தை தமிழகத்தில் ரூ.3,500 கோடியில் நிறுவவும், 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலும் லூலூ குழுமத்துடனும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
அதேபோல, ஆஸ்டர் டிஎம் மருத்துவ குழுமத்துடன் சென்னையில் ரூ.500 கோடியில் 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை உருவாக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஷெராப் குழுமத்துடன் ரூ.500 கோடியில், 1,000 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் சரக்கு பூங்கா அமைக்கவும் ஒப்பந்தம்போடப்பட்டுள்ளது.
அரபு நாடுகளில் மிகப்பெரிய ஜவுளி உற்பத்தியாளர்களான ஒயிட்ஹவுஸ் நிறுவனத்துடன் திண்டிவனம், வாலாஜாபாத் பகுதிகளில் ரூ.500 கோடி முதலீட்டில் 3 ஆயிரம் பேருக்கு வேலை அளிக்கும் ஆடை மற்றும் தையல் திட்டங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் நான் துபாய்க்கு மேற்கொண்ட அரசு முறை பயணத்தின் விளைவாக கிடைக்கும் முதலீடுகளாகும்.
கடந்த 10 மாதங்களிலேயே தொழில்துறையில் இந்த அரசு செய்துள்ள சாதனைகளுக்கு அரசு பொறுப்பேற்றதும் எடுத்த நடவடிக்கைகள்தான் காரணம். ஒற்றைச்சாளர இணையதளம், ஒற்றைச்சாளர கைபேசி செயலி, நில தகவல் இணையம், வழிகாட்டி நிறுவனத்தின் இணையதளம் என தொழில் துறையில் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் முதலீட்டாளர்களுக்கும், புதிய தொழில் தொடங்குவோருக்கும் மிகப்பெரிய நம்பிக்கையை அரசு மற்றும் தமிழகத்தின் மீது அளித்துள்ளது.
கடந்த, 2021-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை மட்டும் தமிழகத்தில் வெளிநாட்டு நேரடி முதலீடு 41.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
அடுத்தகட்டமாக, இந்த ஆண்டு மே மாதம் சுவிட்சர்லாந்தில் நடக்க உள்ள உலகப் பொருளாதார அமைப்பின் வருடாந்திர கூட்டம், ஜெர்மனியில் நடக்கும் ஹானோவர் நிகழ்வு, ஜூனில் இங்கிலாந்தில் நடக்கும் ‘குளோபல் ஆஃப் ஷோர் வின்ட்’ நிகழ்வு ஆகியவற்றிலும் ஜூலையில் அமெரிக்காவில் முன்னணி முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன.
மேலும், 2023-ம் ஆண்டின் இறுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடுதமிழகத்தில் நடத்தப்பட்டு, அதிகமான முதலீடுகள் திரட்டப்படுவதுடன், பல லட்சம் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பும் உருவாக்கப்படும். தமிழகத்துக்கு முதலீடுகளை அதிகரிக்க மேற்கொள்ளப்படும் அரசின் இந்த முயற்சிகளுக்கு அனைவரும் கட்சி வித்தியாசம் பாராமல் துணை நிற்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.