மைசூரு : மைசூரு ஹுன்சூரில் அரசு உயர்நிலைப்பள்ளியில், இறந்த அண்ணன் பெயரில் 24 ஆண்டாக ஆசிரியராக பணிபுரிந்த நபர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.
மைசூரு மாவட்டம், ஹுன்சூர் தாலுகா, ஹிரிகியாதனஹள்ளி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியின் ஆசிரியராக பணிபுரிபவர் லட்சுமண கவுடா, 49.இவரது அண்ணன் தான் இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். தேர்வுக்கு பின் அவர் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.அதன் பின், தான் தான் அந்த நபர் என்று பொய்யாக கூறி, அண்ணன் ஆவணங்களை தன் பெயருக்கு மாற்றி காண்பித்து பணியில் சேர்ந்துள்ளார்.
24 ஆண்டுகளுக்கு பின், சமீபத்தில் தான் அவர் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக, மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது; துறை ரீதியாகவும் விசாரிக்கப்படுகிறது.இதற்கிடையில், அவரை பணி இடை நீக்கம் செய்து மைசூரு மாவட்ட கல்வி துறை துணை இயக்குனர் ராமசந்திரராஜே அரஸ் நேற்று உத்தரவிட்டார்.ஆசிரியர் மீது விசாரணை நடக்கிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், பணியிலிருந்து நீக்கப்படுவார் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
மேலும், பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டை ஒட்டி, ‘போக்சோ’ எனப்படும் பெண்கள், சிறுமியருக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை அளிக்கும் சட்டத்தின் கீழ், பிரியாப்பட்டணா அரசு உயர்நிலைப்பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் ஒருவரும் நேற்று பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Advertisement