மரியுபோல்: உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் ஒருமாதத்துக்கு மேலாக நடந்து கொண்டிருக்கிறது. துறைமுக நகரான மரியுபோலில் ரஷ்யப் படைகள் ஊடுருவலுக்குப் பிறகு 5,000 உக்ரைனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நகர மேயர் வாடிம் பாய்சென்கோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மரியுபோல் மேயர் வாடிம் பாய்சென்கோ கூறும்போது, “ இந்த ஒரு மாதத்தில் ரஷ்ய ராணுவத்தினரால் சுமார் 5,000 உக்ரைனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 210 பேர் குழந்தைகள். உக்ரைனின் சாலையில் ஆங்காங்கே பிணங்கள் கிடக்கின்றன. ரஷ்யா உக்ரைனின் பல நகரங்களை அழித்துள்ளது” என்றுத் தெரிவித்தார்.
இந்த நிலையில் ரஷ்யாவின் அமைச்சர்கள் மீதும், அதன் அதிகாரிகள் மீதும் மேலும் கூடுதலாக பொருளாதாரத் தடைகள் அமெரிக்கா தயாராகி வருகின்றது. தலைநகர் கீவ்வை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பின்வாங்கிய பிறகு, ரஷ்யப் படைகள்கிழக்கில் கவனம் செலுத்த மீண்டும் ஒருங்கிணைத்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ரஷ்யா நடந்தும் போர் காரணமாக, உக்ரைனிலிருந்து 40 லட்சம் பேர் அண்டை நாடுகளுக்கு வெளியேறியுள்ளனர். அவர்களில் 90% பேர் பெண்கள், குழந்தைகள். இதுதவிர 60 லட்சம் பேர் உள்நாட்டிலேயே வாழ்விடத்திலிருந்து வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ளனர் என ஐ.நா.வுக்கான அகதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.