சென்னை: அரசுப் பள்ளிகளில் தோற்றுவிக்கப்பட்ட 900 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு தொடர் பணி நீட்டிப்பு வழங்கி பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர்காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணை: 2013-14-ம் கல்வியாண்டில் 100 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. ஒரு பள்ளிக்குதலா 9 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 900 பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டன.
இவர்களுக்கான பணிக்காலம் கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிந்துவிட்டது. அதன் பின்னர் சம்பள நீட்டிப்பாணை மூலம் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், பள்ளிக்கல்வி ஆணையர் பரிந்துரையின்படி அந்த 900 முதுநிலை ஆசிரியர்களுக்கு 2024, ஜூன் 30 வரைஅல்லது தற்காலிக பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு குறித்து முடிவெடுக்கும் வரை, தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது.
இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.