15 வது ஐ.பி.எல் சீசனின் 15 வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதியிருந்தன. கடைசி ஓவர் வரை பரபரப்பாக சென்ற இந்தப் போட்டியில் லக்னோ அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியிருக்கிறது.
போட்டிக்கு முன்பாக பிரித்வி ஷா ஒரு பேட்டி கொடுத்திருதார். அதில், “நான் வலைப்பயிற்சியில் நன்றாக ஆடிக்கொண்டிருக்கிறேன். மீண்டும் ஃபார்முக்குத் திரும்ப ஒரே ஒரு போட்டி போதும்” எனப் பேசியிருந்தார். பிரித்வி ஷா சொன்ன அந்த ஒரு போட்டி லக்னோவிற்கு எதிரான இந்தப் போட்டியாகவே அமைந்தது சுவாரஸ்யம். வார்னர் மீண்டும் டெல்லி அணிக்கு கம்பேக் கொடுத்திருக்கிறார். ஆனால், வார்னரைப் பற்றிய பேச்சுகளே உருவாகிராத வகையில் பிரித்வி ஷா ஒரு சம்பவத்தை நிகழ்த்தியிருந்தார். பவர்ப்ளே முழுவதும் ஒன்மேன் ஷோவாக வெறியாட்டம் ஆடி டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு அற்புதமான தொடக்கத்தை பெற்றுக் கொடுத்தார்.
கிருஷ்ணப்பா கௌதம் வீசிய 2 ஓவரில் 2 பவுண்டரிகளை அடித்து அதிரடியைத் தொடங்கியிருந்தார். ஹோல்டர் வீசிய அடுத்த ஓவரில் ஒரு பவுண்டரி ஒரு சிக்சர். ஆவேஷ் கான் வீசிய நான்காவது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகள். அடுத்ததாக வீசிய ரவி பிஷ்னோய் மற்றும் ஆண்ட்ரூ டை ஆகியோரின் ஓவர்களில் கொஞ்சம் அடக்கி வாசித்து தலா ஒரு பவுண்டரி. பவர்ப்ளே முடிந்தவுடன் கிருஷ்ணப்பா கௌதம் வீசிய ஓவரில் மீண்டும் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர். இவ்வாறாக அந்தத் தொடக்க ஓவர்கள் முழுவதையும் பிரித்வி ஷா தனது கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொண்டு வெளுத்தெடுத்தார். பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு அலுப்போடு வந்து சேர்ந்திருந்த வார்னருக்கு நான்-ஸ்ட்ரைக்கர் முனையில் நல்ல ஓய்வு கிடைத்தது. சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை பிரித்விக்கு ரொட்டேட் செய்து கொடுப்பது மட்டுமே அவருடைய வேலையாக இருந்தது.
பிரித்வி ஷா லெக் சைடிலும் ஷாட்களை அடித்திருந்தாலும் ஆஃப் சைடில் பாயிண்ட்டிலும் கவரிலும் அவர் அடித்த ஷாட்கள்தான் ரொம்பவே ரம்மியமாக இருந்தன. பிரித்வி ஷாவின் Foot Work-ல் ரிக்கி பாண்டிங்கிற்கு எப்போதுமே திருப்தி இருந்ததில்லை. இந்தப் போட்டியிலுமே பிரித்வி ஷாவின் கால்கள் அத்தனை நேர்த்தியாகவெல்லாம் நகர்ந்திருக்கவில்லை. ஆனாலும் தன்னம்பிக்கையுடன் வலுவாக மிடில் ஆஃப் தி பேட்டில் பிரித்வி அடித்த ஷாட்களை ரிக்கி பாண்டுங்கும் கொண்டாடினார்.
கிருஷ்ணப்பா கௌதம் வீசிய எட்டாவது ஓவரில் முதல் பந்தில் சிக்சரையும் இரண்டாவது பந்தில் பவுண்டரியையும் அடித்துவிட்டு மூன்றாவது பந்திலும் ஆஃப் சைடில் ஒரு கட் ஷாட்டுக்கு பிரித்வி முயன்றார். ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து கௌதம் வீசிய இந்தப் பந்து பிரித்வியை ஏமாற்றி எட்ஜ் ஆக்கி கீப்பரின் கைகளுக்குள் புகுந்தது.
பிரித்வி ஷா அவுட் ஆன போது அணியின் ஸ்கோர் 67, இந்த 67 ரன்களில் பிரித்வி ஷா மட்டுமே 61 ரன்களை எடுத்திருந்தார். வார்னர் 4 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார்.
முழுமையாக ஆதிக்கம் செலுத்தி ஆடிக் கொண்டிருந்த பிரித்வி நின்றிருந்தால் 10 ஓவருக்குள்ளேயே கூட அவர் சதமடித்திருக்கக்கூடும். ஜஸ்டு மிஸ்!
பிரித்வி ஷா தூளான தொடக்கத்தைக் கொடுத்து வெளியேறிய பிறகு, அந்தத் தொடக்கத்தை அப்படியே தொய்வில்லாமல் கடத்தி பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்வதுதானே ஞாயம்? ஆனால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அதைத் தலைகீழாக செய்திருந்தனர்.
பிரித்வி ஷா போட்டிக்கு முன்பு பேட்டி கொடுத்திருந்தாரே… அதில் அவர் தன்னுடைய ஃபார்ம் பற்றி மட்டும் பேசியிருக்கவில்லை. கூடவே இன்னொரு விஷயத்தையும் சொன்னார். “எங்களின் மிடில் ஆர்டர் பேட்டர்கள் நல்ல டச்சுடன் வலுவாக இருக்கிறார்கள்” எனப் பேசியிருந்தார். பிரித்வி ஷா அவரது ஃபார்ம் பற்றி பேசிய முதல் விஷயம் இந்தப் போட்டியில் அப்படியே அரங்கேறியிருந்தது. ஆனால், இரண்டாவதாக சொன்னாரே அந்த வலுவான மிடில் ஆர்டர் ஸ்டேட்மெண்ட். அது வஞ்சப்புகழ்ச்சி அணியாக மாறிவிட்டது.
பிரித்வி ஷா அவுட் ஆன உடனே ரவி பிஷ்னோயின் ஓவரில் வார்னரும் நம்பர் 3-க்கு ப்ரமோட் செய்யப்பட்டிருந்த ரோவன் பவலும் அவுட் ஆகியிருந்தனர்.
இதன்பிறகு, கேப்டன் ரிஷப் பண்ட்டும் சர்ஃபராஷ் கானும் கூட்டணி சேர்ந்திருந்தனர். இருவருமே பயங்கரமான அதிரடி வீரர்கள். பிரித்வி ஷா எடுத்துக் கொடுத்த ஸ்கோரை அப்படியே மூன்று மடங்காக அதிகரித்து கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சோகமே மிஞ்சியது. இருவரும் ரொம்பவே மெதுவாக ஆடி நிறைய டாட்களுடன் ஓடி ஓடியே ரன்கள் எடுத்திருந்தனர்.
10.3 வது ஓவரில் இணைந்த இந்தக் கூட்டணி கடைசி வரை பிரியவில்லை. ஆனால், 57 பந்துகளில் 75 ரன்களை மட்டுமே எடுத்திருந்தனர்.
மூன்று விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்த சமயத்தில் நல்ல ரன்ரேட் இருந்ததால் ரன்னுக்காக ஆடுவதை விட விக்கெட்டிற்காக ஆடுவதுதான் சரியாக இருக்கும் என இந்தக் கூட்டணி நினைத்திருக்கலாம். அப்படியாயினும் நன்றாக செட்டில் ஆகிவிட்டு இறங்கி அடித்திருக்க வேண்டாமா! அதை இந்தக் கூட்டணி செய்யவே இல்லை.
கௌதமின் ஓவரை பண்ட் மெய்டனாகவெல்லாம் மாற்றியிருந்தார். ஆண்ட்ரு டை மற்றும் ஆவேஷ் கான் வீசிய 16வது மற்றும் 17வது, இந்த இரண்டு ஓவரில் மட்டும் 31 ரன்களை அடித்திருந்தனர். ஆடியதிலேயே இந்த இரண்டு ஓவர்களைத்தான் டி20 போன்று ஆடுயிருந்தனர். கடைசி 3 ஓவர்களிலெல்லாம் ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே வந்திருந்தது. ஹோல்டர், ஆவேஷ் கான் இருவரும் சேர்ந்து இந்த மூன்று ஓவர்களை வீசி 19 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தனர். லலித் யாதவ், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர் என் ஒரு பெரும்படையே இருந்தும் பண்டும் சர்ஃபராஷும் இன்னும் கொஞ்சம் ரிஸ்க் எடுக்காமல் சொதப்பி இருந்தனர். இதனால் ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருந்த டெல்லியின் ரன் ரேட் மொத்தமாக விழுந்தது. 20 ஓவர்களில் 149 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர். சர்ஃபராஷ் 36 ரன்களையும் ரிஷப் பண்ட் 39 ரன்களையும் அடித்திருந்தனர். இதில், பண்ட்டின் ஸ்ட்ரைக் ரேட் 108தான். டெஸ்ட் மேட்சில் கூட அவரின் ஸ்ட்ரைக் ரேட், நிச்சயம் இதைவிட அதிகமாகவே இருக்கும்.
ரிக்கி பாண்டிங் தனது நோட்டில் எதையோ குறிப்பெடுத்துக் கொண்டிருக்க பின்னணியில் சோகமான வாத்திய இசை ஒலித்துக் கொண்டிருந்தது!
லக்னோ அணிக்கு 150 ரன்கள் இலக்கு. இரண்டு மூன்று ஓவர்களை மீதம் வைத்து வெல்லக்கூடிய டார்கெட்தான் என்றாலும் லக்னோ அணிக்கு அவ்வாறு வெல்வதில் விருப்பமில்லை. ரிஸ்க் எடுக்காமல் நல்ல பார்ட்னர்ஷிப்களை பில்ட் செய்து சௌகரியமாக வெல்ல வேண்டும் என்று லக்னோ விரும்பியது. பவர்ப்ளேயின் தொடக்கத்தில் முஷ்டாஃபிஷுரும் லலித் யாதவும் நான்கு ஓவர்களை வீசியிருந்தனர். ராகுல் மற்றும் டீ காக் இருவருமே இந்த ஒவர்களில் ரொம்பவே நிதானமாக ஆடியிருந்தனர். 5வது ஓவரில் சக நாட்டுக்காரரான நார்க்கியா உள்ளே வர டீ காக் உரிமையோடு அடிக்கத் தொடங்கினார். அந்த ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகள் வந்திருந்தன. பவர்ப்ளே முடிந்தபிறகு குல்தீப் யாதவ் பந்துவீச வந்தார். இந்த முறை உரிமை எடுத்துக்கொண்டு ஆடியவர் கே.எல்.ராகுல். குல்தீப் யாதவ்வின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்திருந்தார். அடுத்த ஓவரிலேயே பதிலுக்கு குல்தீப் கூடுதல் உரிமையோடு ராகுலின் விக்கெட்டை தூக்கினார்.
ராகுல் அவுட் ஆனாலும் டீகாக் தொடந்து ஆடினார். டெல்லியின் ஸ்பின்னர்கள் நன்றாக வீசினாலும் இடையிடையே நார்க்கியா வந்து நல்ல ரன்களை கொடுத்து ரன்ரேட் அழுத்தத்தை குறைத்து வைத்தார். ஒரு கட்டத்தில் டீ காக் 80 ரன்களில் ஆட்டமிழக்க, அப்போதுதான் போட்டி சூடுபிடிக்க தொடங்கியது. டெத் ஓவர்கள் ஓரளவுக்கு பரபரப்பாகவே இருந்தன. கடைசி ஓவரில் லக்னோவுக்கு 7 ரன்கள் தேவைப்பட்டன. ஷர்துல் தாக்கூர் வீசய அந்த ஓவரின் முதல் பந்திலேயே அக்சர் படேல் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார்.
ஆனால், இதன்பிறகு உள்ளே வந்த இளம் வீரர் பதோனி, மூன்று பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் சிக்சரை வின்னிங் ஷாட்டாக அடித்து அதகளப்படுத்தினார். லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
டெல்லி அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது அதன் Under Performance. இது ஏதோ இந்தப் போட்டியில் மட்டும் அந்த அணிக்கு இருக்கும் பிரச்னையல்ல. கடந்த சில சீசன்களாகவே தங்களின் முழுத்திறனையும் வெளிக்காட்டுவதில் திணறுகிறது டெல்லி. இந்தப் போட்டியில் பிரித்வி ஷா கொடுத்த நல்ல தொடக்கத்தை அப்படியே தொய்வில்லாமல் கொண்டு சென்று ஒரு உச்சத்தில் வைத்திருக்க வேண்டும். வாய்ப்பிருந்தும் அது நிகழாமல் போனது.