2019 ம் ஆண்டு எம். ராஜேஷ் இயக்கத்தில் ஞானவேல்ராஜா தயாரித்து வெளியான படம் மிஸ்டர் லோக்கல்.
இந்தப் படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயனுக்கு ரூ. 15 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது.
ரூ. 11 கோடி மட்டுமே சம்பளம் வழங்கிய நிலையில் தயாரிப்பு நிறுவனம் அதற்கான டி.டி.எஸ். தொகையை வருமான வரித்துறையில் செலுத்தவில்லை என்று கூறி சிவகார்த்திகேயன் தரப்பில் ஏற்கனவே வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்நிலையில், தனக்கு வரவேண்டிய மீதம் 4 கோடி ரூபாய் சம்பள பாக்கியை வழங்க உத்தரவிடக் கோரி மற்றொரு மனுவை சிவகார்த்திகேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது அப்போது, “சம்பள பாக்கி தொடர்பாக மூன்றாண்டுகள் கழித்து வழக்கு தொடர்ந்துள்ளது ஏன் ?” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், டி.டி.எஸ். விவகாரம் தொடர்பாக ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், தற்போது மற்றொரு மனு எதற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது ? என்றும் கேள்வி எழுப்பினார்.
சிவகார்த்திகேயன் கட்டாயப்படுத்தியதால் தான் மிஸ்டர் லோக்கல் படம் எடுக்கப்பட்டது என்றும் மிஸ்டர் லோக்கல் படத்தால் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் ஞானவேல் ராஜா தனது மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை வரும் 13 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.