தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொடர்பாக மக்கள் சந்திக்கும் குறைகளைத் தீர்க்க சென்னை தெற்கு மண்டல பிஎஃப் அலுவலகம் வரும் ஏப்ரல் 11-ம் தேதி திங்கள் கிழமை குறைதீர்ப்பு முகாமை ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாக சென்னை தெற்கு மண்டல ஆணையர் பி.ஹன்ஸ்சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஒவ்வொரு மாதமும் 10-ம் தேதி வருங்கால வைப்பு நிதி சட்டப்படி சென்னை தெற்கு மண்டல அலுவலகத்தில் பிஎஃப் உறுப்பினர்களின் குறைகள் மற்றும் புகார்களைக் கேட்டு அவற்றுக்கு விரைவாக தீர்வுகளைக் காணும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. `நிதி ஆப்கே நிகத்’ என்ற பெயரில் நடத்தப்பட்டுவரும் இந்த குறைதீர்ப்பு முகாம் இந்த மாதம் 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் வருவதால் 11-ம் தேதி திங்கள் கிழமை அன்று நடத்தப்படும்.
அன்றைய தினம் சென்னை தெற்கு மண்டல அலுவலகத்துக்கு பி.எஃப் உறுப்பினர்கள் வந்து தங்களுடைய குறைகளுக்குத் தீர்வு காணலாம். பி.எஃப் உறுப்பினர்கள் தங்களின் குறைகள் மற்றும் புகார்களுக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் வருவது முக்கியம்” என்று கூறினார்.
இந்த குறைதீர்ப்பு முகாமில் பி.எஃப் விவரங்களில் உள்ள முரண்பாடுகளைச் சரி செய்தல், கிளெய்ம் பெறுவதில் குளறுபடிகள், பென்ஷன் பெறுவதில் சிக்கல், இறந்த பிஎஃப்தாரரின் நாமினி தொகையைப் பெறுவதில் சிக்கல் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் வழங்கப்படுகின்றன.