சூடாக வந்திருக்கும் சுஸூகியின் புது அட்வென்ச்சர் பைக்கில் இவ்வளவு ஸ்பெஷலா? மற்ற அட்வென்ச்சர் பைக்குகளை விட பல ஸ்பெஷல்கள் இதில் இருக்கின்றன. ஓவர்ஆலாக நல்ல பேக்கேஜாக, பல சூப்பர் அம்சங்களுடன் வந்திருக்கிறது வி–ஸ்ட்ராம் 250 சிசி பைக்.
சுஸூகியில் ஸ்போர்ட்ஸ் பைக் இருக்கு; க்ரூஸர் பைக் இருக்கு; பிக் பைக்ஸ் இருக்கு; ஸ்கூட்டரும் இருக்கு! அட்வென்ச்சர் மட்டும்தான் இல்லாமல் இருந்தது. இப்போது அந்தக் குறையும் தீர்ந்து விட்டது. அட்வென்ச்சர் பைக் செக்மென்ட்டில் லேட்டஸ்ட்டாக, V – Strom SX என்றொரு பைக்கை அறிமுகப்படுத்தி இருக்கிறது சுஸூகி.
வெளிநாடுகளில் இந்த வி–ஸ்ட்ராம் பைக், 2017–ல் இருந்தே பல சிசிக்களில் விற்பனையில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. நம் ஊருக்கு இப்போதுதான் கொண்டு வர வேண்டும் என்கிற ஐடியாவுக்கு வந்திருக்கிறது போல சுஸூகிக்கு. கேடிஎம் 250, யெஸ்டி அட்வென்ச்சர், பெனெல்லி TRK போன்ற பைக்குகளுக்குப் போட்டியாக வரும் வி–ஸ்ட்ராம் SX பைக்கில் என்ன ஸ்பெஷல்னு பார்க்கலாம்!
இதில் இருப்பது ஜிக்ஸர் 250 மற்றும் SF 250-ல் இருக்கும் அதே 249 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஆயில் கூல்டு இன்ஜின்தான். இதன் பவர் 26.5 குதிரை சக்திகள். எப்படியும் இதில் டாப் ஸ்பீடு 150 கிமீ வரை பறக்கலாம் என்று நினைக்கிறோம். இதன் டார்க் 22.2Nm டார்க். இதன் ஆர்பிஎம்–மைக் கவனியுங்கள்; 7,300rpm. அதாவது, சிக்னலில் இருந்து சட்டெனச் சீறலாம். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இதில் இருக்கிறது. அட்வென்ச்சருக்கு ஏற்றபடி இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 205 மிமீ வைத்திருக்கிறார்கள். மேடு பள்ளங்கள், பாறைகள், ஸ்பீடு பிரேக்கர்கள் போன்றவற்றில் தாராளமாக ஏறி இறங்கலாம்.
இதன் எடை மற்ற அட்வென்ச்சர் பைக்குகளைவிடக் கணிசமாகக் குறைகிறது. 167 கிலோதான் என்பதால், ஈஸியாகக் கையாளலாம். இதன் சீட் உயரம் என்பது 835 மிமீ என்பதால், உயரம் குறைவானவர்கள்கூட எளிதில் கையாளலாம். இதன் டயர்களும் சூப்பர். முன் பக்கம் 19 இன்ச்; பின் பக்கம் 17 இன்ச் என்பது அருமை. இதைவிட சுஸூகிக்கு இன்னொரு கைக்குலுக்கல் – பொதுவாக அட்வென்ச்சர் பைக்குகளை ஸ்போக் வீல் கொடுத்து ட்யூப் டயரைக் கொடுத்து விடுவார்கள். ஆனால், இதிலிருப்பது ட்யூப்லெஸ் அலாய் வீல்கள். அதனால், பஞ்சர் பயம் தேவையில்லை. இரவு நேரங்களில் வெளிச்சம் பீய்ச்சியடிக்க… அட, ஹெட்லைட்கள், DRL–கள் முழுக்க முழுக்கு எல்இடி மயம். கனெக்டட் வசதி, டர்ன்–பை–டர்ன் நேவிகேஷன் வசதி, சார்ஜிங்குக்கு யுஎஸ்பி போர்ட், போன் அழைப்புகள் என எல்லா லேட்டஸ்ட் வசதிகளும் உண்டு.
அட்வென்ச்சர் பைக் என்பதால், சஸ்பென்ஷனிலும் நன்றாகக் கவனம் செலுத்தியிருக்கிறது சுஸூகி. இதன் ஸ்விங் ஆர்ம் டைப், ஆயில் டேம்ப்டு சஸ்பென்ஷன் டிராவல் அதிகமாக இருப்பதால்… முதுகு வலிக்கு மூச்! டூயல் சேனல் ஏபிஎஸ் இருப்பதால்… வேகங்களில் பிரேக் பிடிக்கும்போது நிச்சயம் ஸ்கிட் ஆகாது என்றே சொல்லலாம்.
வெறும் அட்வென்ச்சரும் இல்லை; நெடுஞ்சாலைகளிலும் பறக்கலாம் என்பதற்கு ஏற்ப, இதன் ஏரோடைனமிக்ஸ் லெவலும் நச்! விண்ட் ஸ்க்ரீன் இருப்பதால், காற்று முகத்தில் அறையாமல் இருக்கும். பைக் கீழே விழுந்துவிட்டால், கைகளுக்கு அடிபடாமல் இருக்க Knuckle Guard–ம் கொடுத்திருக்கிறார்கள். அட்வென்ச்சர் செய்யும்போது, இன்ஜினுக்கு அடிபடக் கூடாது என்பதற்காக இன்ஜினுக்கும் கார்டு உண்டு. காதைக் கிழிக்காமல் இருக்க, டபுள் எக்ஸாஸ்ட்டும் இருக்கிறது. இதன் பெட்ரோல் டேங்க் மட்டும் 12 லிட்டர் கொள்ளளவு.
அட்வென்ச்சர் பைக்குகளில் மற்ற நிறுவனங்கள், பல விஷயங்களில் காம்ப்ரமைஸ் செய்து கொள்ள வேண்டும் வாடிக்யைாளர்கள். ஆனால், சுஸூகியின் வி–ஸ்ட்ராம் SX பைக்கைப் பொருத்தவரை, எல்லாமே பக்காவாக இருப்பதுபோல் தெரிகிறது. ஒரு நல்ல ஓவர்ஆல் அட்வென்ச்சர் பேக்கேஜ் பைக்காக இது இருக்கும். இதன் எக்ஸ் ஷோரூம் விலையும் 2.16 லட்சம் (சென்னை ) என்பது ரொம்ப டூ மச் இல்லை!
சுஸூகியின் இந்த அட்வென்ச்சர் பைக்கின் ஓட்டுதல், மைலேஜ், பெர்ஃபாமன்ஸ் எல்லாம் எப்படி இருக்கு என்பதற்கு, ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட் வரும் வரை காத்திருங்கள்!