அச்சிறுபாக்கம் ஆட்சீசுவரர் கோயில், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மதுராந்தகத்தை அடுத்து அச்சரப்பாக்கத்தில் அமைந்துள்ளது.
அச்சரப்பாக்கம் என்று தற்போது மக்கள் வழக்கில் வழங்கப்பட்டு வரும் அச்சிறுப்பாக்கம் சிவன் கோயில் தொண்டைமண்டலத்தின் பாடல் பெற்ற தலங்களில் 29-வது தலமாகும். திருஞானசம்பந்தர் இத்தலத்தைப் பாடியுள்ளார்.
இக்கோயிலில் ஆட்சீசுவரர், உமையாட்சீசுவரர் என இரண்டு கருவறைகள் உள்ளன. உமையாட்சீஸ்வரர் சந்நிதி, வாயிலுக்கு நேரே உள் திருச்சுற்றில் அமைந்துள்ளது.
சித்திரைத் பெருவிழாவில் 11-ஆம் நாள் சுவாமி ‘பெரும்பேறு கண்டிகை’ கிராமத்திற்கு எழுந்தருளி, அகத்தியருக்குக் காட்சி தரும் ஐதீகம் நடைபெறுகிறது. கௌதமமுனிவர், கண்ணுவமுனிவர் ஆகியோர் இங்கு வழிபட்டதாக தலபுராணம் கூறுகின்றது. தலபுராணத்தோடு தொடர்புடைய அச்சு முறி விநாயகர் தனி சந்நிதி கொண்டுள்ளார்.
தல வரலாறு
திரிபுரம் எரிக்க சிவபெருமான் செல்லும் பொழுது தேர் அச்சு முறிந்தது. இதற்கு கணபதியிடம் விடை பெறாததே காரணம் என்று கணபதிக்கு ஆசி வழங்கிய தலம் இதுவாகும். அச்சு + இறு + பாக்கம் – அச்சிறுபாக்கம் என்பது மருவி அச்சரப்பாக்கம் என தற்போழுது வழங்கப்பெறுகிறது.
ந்து நிலைகள் கொண்ட கிழக்கு நோக்கிய இராஜகோபுரத்துடன் இக்கோயில் அமைந்துள்ளது. கோபுர வாயிலைக் கடந்தவுடன் நேராக இல்லாமல் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை சற்று இடதுபுறம் அமைந்துள்ளது. இக்கோயிலில் இரண்டு கருவறைகள் அமைந்துள்ளன. கோபுர வாயிலுக்கு நேரே உள்ள உள் வாயில் வழியாகச் சென்றால் நேர் எதிரே உமையாட்சீஸ்வரர் சந்நிதி உள்ளது. உள் வாயில் நுழைந்தவடன் சற்று வலதுபுறத்தில் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவற்றிற்கு எதிரே உள்ளபடி அமைந்திருக்கும் ஆட்சீஸ்வரர் சந்நிதி உள்ளது. இந்த ஆட்சீஸ்வரர் சந்நிதி இக்கோயிலின் முக்கியமான மூலவர் கருவறையாகும். உள் வாயிலைக் கடந்தவுடன் வலதுபுறம் உள்ள ஆட்சீஸ்வரரை தரிசித்துவிட்டு சற்று நேரே உமையாட்சீஸ்வரர் கருவறை அமைந்துள்ளது. கோயிலின் வடபுற வெளித்திருச்சுற்றில் தலமரமான சரக்கொன்றையின் அடியில் கொன்றையடி ஈஸ்வரர் சந்நிதி காணப்படுகின்றது. அருகில் நந்திகேசுவரரும், சிவனை வணங்கியபடி திரிநேத்ரதாரி முனிவரும் உள்ளனர். வடபுற வெளித்திருச்சுற்றின் வடகிழக்கு மூலையில் இத்தலத்தின் பிரதான அம்பாள் இளங்கிளி அம்மை தனி சந்நிதியில் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறாள். சிவபெருமானின் தேர் அச்சை முறித்த விநாயகர் “அச்சுமுறி விநாயகர்” என்ற பெயருடன் கோவிலுக்கு வெளியே தனி சந்நிதியில் மேற்கு நோக்கி அமர்ந்து காட்சி தருகிறார்.
தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 29-வது தலம். சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்சவம், பவுர்ணமியில் விசேஷ பூஜைகள் நடக்கிறது. ஆட்சிபுரீஸ்வரரிடம் வேண்டிக்கொண்டால் ஆட்சி செய்யும் வாய்ப்பு, ஆளுமைத் திறன், பதவி உயர்வு கிடைக்கும் என்பதும், சுவாமி அட்சரம் எனும் எழுத்தின் வடிவமாக இருப்பதால் கல்வி, வேள்விகளில் சிறக்கலாம் என்பதும் நம்பிக்கை. இங்கு அமாவாசை தோறும் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. இதில் கலந்துகொண்டால் தோஷங்கள், ஜென்ம வினைகள், தொழில் தடைகள், மனக் குழப்பங்கள் நீங்கும் என நம்புகின்றனர். பிரார்த்தனை நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூபூைஜகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.