டெல்லி: முல்லைப் பெரியாறு மேற்பார்வை குழுவுக்கு மேலும் 2 உறுப்பினர்களை உச்சநீதிமன்றம் நியமித்தது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து தலா ஒரு தொழில்நுட்ப நிபுணர்களை நீதிமன்றம் நியமித்தது. கேரள மாநிலத்தில் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டுள்ளது. ஆனால் அணையின் பராமரிப்பு தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இதனால் பல ஆண்டுகால பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு, தற்போது வரை நடைபெற்று வருகிறது. அதில் ஒரு வழக்கான முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான ரிட் மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, முல்லைப் பெரியாறு மேற்பார்வை குழுவுக்கு மேலும் 2 உறுப்பினர்களை நீதிபதிகள் நியமித்தனர். முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான இயக்கம் மிகவும் முக்கியம். மேற்பார்வை குழுவின் உத்தரவுகள், பரிந்துரையை இரு மாநிலமும் கடைபிடிக்க வேண்டும். மேற்பார்வை குழுவுக்கு முழு ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுரை வழங்கினர். கண்காணிப்பு மேற்பார்வை குழுவின் உத்தரவை கடைபிடிக்காமல் இருக்கும் பட்சத்தில் மாநில தலைமை செயலரே பொறுப்பு என தெரிவித்த நீதிபதிகள், அணை பாதுகாப்பு ஆணையம் செயல்பாட்டுக்கு வரும் வரை மேற்பார்வை குழுவுக்கு அணையில் அனைத்து அதிகாரம் உள்ளது என கூறினார். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மேற்பார்வை குழுவே அனைத்தையும் கவனிக்கும். ஒன்றிய நீர்வள ஆணையத்தின் சார்பில் ஒரு தொழில்நுட்ப வல்லுநரும் இருப்பார் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.