பெங்களூரு: ட்விட்டர் போல் பிரபலங்களுக்கு மட்டுமானதாக இல்லாமல், ஒவ்வொரு பயனாளர்களும் தங்கள் கணக்கை அதிகாரப்பூர்வமானதாக மாற்றும் வகையில் புதிய வசதியை அறிமுகம் செய்ய இந்திய சமூக வலைதளமான ‘கூ’ திட்டமிட்டுள்ளது.
ட்விட்டரில் பிரபலங்களின் கணக்குகளில் புளூ நிறத்தில் ‘டிக்’ குறியீடு இடம்பெற்றிருக்கும். இந்த‘டிக்’ குறியீடானது அந்தக் கணக்கு ட்விட்டர் நிறுவனத்தால் சரிபார்க்கப்பட்டது என்பதைக் குறிப்பதாகும். அத்தகைய ‘டிக்’ குறியீடு கொண்டிருக்கும் சரிபார்க்கப்பட்ட கணக்குகள் சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வ கணக்குகளாக பார்க்கப்படுகிறது. டிவிட்டரைப் பொருத்த வரையில், இந்தக் குறியீடு அனைத்துப் பயனாளர்களுக்கும் வழங்கப்படுவதில்லை. பிரபலங்களுக்கும், முக்கிய ஆளுமைகளுக்கும் மட்டுமே பல்வேறு கட்ட சரிபார்ப்பு நடைமுறைகளுக்குப் பிறகு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் ட்விட்டருக்கு மாற்றாக முன்னிறுத்தப்பட்ட ‘கூ’, தங்கள் பயனாளர்கள் ஒவ்வொரும் தங்கள் கணக்கை தாங்களே அதிகாரப்பூர்வமானதாக மாற்றிக்கொள்ளும் வகையில் புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி, தன் கணக்கை அதிகாரப்பூர்வமானதாக மாற்ற விரும்பும் பயனாளர், தன் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.
அதன் பிறகு அந்த ஆதார் எண் தொடர்புடைய மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதையெடுத்து அவரது கணக்கு அதிகாரப்பூர்வமானது என்பதற்கான அடையாளமாக பச்சை நிற ‘டிக்’ குறியீடு வழங்கப்படும். பயனாளர்கள் அனைவரும் தங்கள் கணக்கை தாங்களே அதிகாரப்பூர்வமானதாக மாற்றிக்கொள்ள முடியும் என்பதால், போலி கணக்குகள் குறையும் என்றும் இதனால் ‘கூ’வில் புழங்குவது பாதுகாப்பானதாக இருக்கும் என்றும் ‘கூ’ தெரிவித்துள்ளது.