சென்னை:
இந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு மாற்றாக கருத வேண்டும். உள்ளூர் மொழிகளை அல்ல. இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், ஹிந்திதான் நாட்டின் அதிகாரபூர்வ மொழியாகும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமித்ஷாவின் கருத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் , அமித்ஷாவின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளாதவது: – இந்தி மாநிலம்’ போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர் அமித்ஷா நினைக்கிறாரா?ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது! ஒற்றைத்தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது! ஒரே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள். ஆனால் அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள்!
“ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள்” என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்! இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது” என்றார்.