ஹூப்பள்ளி-”எனக்கும் அமைச்சராக வேண்டுமென்ற ஆசை உள்ளது. நானும் பதவியை எதிர்பார்க்கிறேன்,” என பா.ஜ., – எம்.எல்.ஏ., அரவிந்த் பெல்லத் தெரிவித்தார்.ஹூப்பள்ளியில், அவர் நேற்று கூறியதாவது:அமைச்சரவையில் மூத்தவர்கள் மட்டும் இருந்தால் போதாது. இளைஞர்களும் இருக்க வேண்டும்.அமைச்சராக வேண்டுமென்ற விருப்பம் எனக்கும் உள்ளது. எனக்கு மட்டுமல்ல, மற்ற எம்.எல்.ஏ.,க்களுக்கும் இருக்கும். பா.ஜ., மேலிடம், தன் முடிவுபடி அமைச்சர் பதவி வழங்கும்.அரசியல் என்றால், டில்லி வரை ‘லாபி’ நடப்பது சகஜம். நான் அமைச்சர் பதவி கேட்டு, டில்லிக்கு செல்லவில்லை. வேறு விஷயமாக சென்றிருந்தேன்.அமைச்சர் பதவிக்காக அனைவரும் முயற்சிப்பது சகஜம்; நானும் முயற்சிப்பேன். வட மாநிலங்களின் தேர்தல் ஏற்கனவே முடிந்து விட்டது. கட்சி மேலிடம் தற்போது, தென் மாநிலங்களின் மீது கவனம் செலுத்தியுள்ளது.அமைச்சரவை விஸ்தரிக்கப்படலாம். மூன்று துணை முதல்வர்கள் என்பது, ஊடகங்களின் கற்பனை. என்ன செய்வர் என்பது, பா.ஜ., மேலிடத்துக்கு மட்டுமே தெரியும்.இளைஞர்கள் மற்றும் புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்தால், நன்றாக இருக்கும்; நானும் நல்ல பதிலை எதிர்பார்க்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement