அரசியல் ரீதியாக நான் செயல்படுவதாக நிரூபிக்க முடியுமா?- தெலுங்கானா தலைவர்களுக்கு கவர்னர் தமிழிசை சவால்

ஐதராபாத்:

தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் டெல்லி சென்று பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது தெலுங்கானா நிலவரம் தொடர்பாக அறிக்கை ஒன்றையும் அவர் சமர்ப்பித்தார்.

இந்த சந்திப்பு குறித்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தெலுங்கானாவில் போதை பொருட்கள் பயன்பாடு அதிகளவில் உள்ளது. அதை தடுப்பதற்கு மாநில அரசு உரிய முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு தாய் என்ற முறையில் எனக்கு மிகுந்த வேதனை வந்தது.

இதை அறிந்த பிரதமரும், உள்துறை மந்திரியும் கடும் அதிர்ச்சி தெரிவித்தனர். போதை பொருட்களை தடுக்கும் வி‌ஷயத்தில் மாநில அரசு தீவிர கவனம் செலுத்தாமல் சில சோதனைகளை மட்டும் நடத்தி விட்டுவிடுகிறார்கள். இந்த நிலைமாற வேண்டும்.

தெலுங்கானா மாநில அரசு கவர்னர் மாளிகையை தொடர்ந்து அவமரியாதை செய்து வருகிறது. தெலுங்கானா முதல்-மந்திரி சந்திர சேகரராவை நான் எனது சகோதரர் போலவே கருதுகிறேன். ஆனால் அவர் அப்படி நடந்துகொள்வதில்லை. எனது தாய் மரணம் அடைந்த சமயத்தில் கூட அவர் கவர்னர் மாளிகைக்கு வந்து எனக்கு ஆறுதல் சொன்னது கிடையாது.

அதற்காக நான் அவர்கள் மீது எந்த கோபமோ, அதிருப்தியோ கொண்டது கிடையாது. கருணாநிதி, ஜெயலலிதா, மம்தாபானர்ஜி உள்ளிட்ட பல்வேறு முதல்- மந்திரிகள் கவர்னர்களுடன் மாறுபட்ட கருத்து கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் ஒருபோதும் கவர்னரை அவமதித்ததில்லை.

அரசு விழாக்களுக்கு தவறாமல் கவர்னரை அழைப்பார்கள்.

தெலுங்கானா மாநில அரசு எனது மாநில சுற்றுப் பயணத்துக்கு விமான வசதி எதையும் செய்து தருவதில்லை. நான் இங்கு கவர்னராக பொறுப்பேற்று 2½ ஆண்டுகள் ஆகிறது.

ஆனால் மாநிலத்துக்குள் நான் சுற்றுப்பயணம் செல்ல கார் அல்லது ரெயிலில் தான் செல்கிறேன். இதுவரை நான் மாநிலத்துக்குள் 500 கி.மீட்டர் தொலைவிற்கு காரிலும், ரெயிலிலும் பயணம் செய்துள்ளேன்.

எதகிரிகுட்டா ஆலயத்துக்கு நான் சென்றபோது அங்குள்ள அதிகாரி எனக்கு உரிய மரியாதை தரவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க எனக்கு எல்லா அதிகாரமும் இருக்கிறது என்றாலும் அத்தகைய நடைமுறைகளை நான் ஒருபோதும் கடைபிடிப்பதில்லை.

ஆலய பயணங்களின் போது நான் அரசியல் செய்வதாக தெலுங்கானா ராஷ்டீரிய சமீதி கட்சி மந்திரிகள் என் மீது குற்றம் சுமத்துகிறார்கள். என்னுடன் நான் பா.ஜ.க. நிர்வாகிகளை அழைத்து சென்றேனா? ஆலயங்களுக்கு செல்லும் போது நான் ஒரு சாதாரண பக்தையாக தான் செல்கிறேன்.

ஒருபோதும் நான் கவர்னர் என்ற அந்தஸ்துடன் ஆலயங்களுக்கு செல்வதில்லை. ஆலயங்களுக்கு சென்ற நாட்களில் அங்கு நான் பா.ஜ.க.வினரை சந்தித்ததை விட தெலுங்கானா கட்சி நிர்வாகிகளை தான் அதிகம் சந்தித்து பேசி இருக்கிறேன். இந்த நிலையில் நான் ஆலய வழிபாட்டின் போது அரசியல் செய்தேன் என்பதை அவர்களால் ஆதாரத்துடன் நிரூபித்து காட்ட முடியுமா?

தெலுங்கானா தலைவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக நான் ஆலயத்திற்கு செல்லாமல் இருக்கமாட்டேன். வருகிற ராமநவமி தினத்தன்று (10-ந்தேதி) பத்ரதிரி ஆலயத்துக்கு செல்ல திட்டமிட்டு இருக்கிறேன். அந்த ஆலயத்துக்கு ரெயிலில் தான் பயணம் செய்ய உள்ளேன்.

என்னை பொருத்த வரை நான் எப்போதுமே அரசியல் ரீதியாக சர்ச்சைகள் செய்வதில்லை. அந்த ரீதியில் நான் இதுவரை எந்த கருத்துகளும் வெளியிட்டதில்லை. என்றாலும் எனக்கு எதிராக தொடர்ந்து குற்றம் சுமத்துகிறார்கள்.

நான் அரசியல் ரீதியாக செயல்படுவதாக தெலுங்கானா தலைவர்களால் நிரூபிக்க முடியுமா? இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்காகவே நான் பாடுபடுகிறேன். அப்படி இருக்கும் போது தெலுங்கானா தலைவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை.

இவ்வாறு கவர்னர் தமிழிசை கூறினார்.

கவர்னர் தமிழிசையின் பேட்டியால் தெலுங்கானா தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கவர்னர் தமிழிசையிடம் எந்த கருத்து வேறுபாடும் தங்களுக்கு இல்லை என்று தெலுங்கானா ராஷ்டீரிய சமீதி கட்சியின் மூத்த தலைவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்… கடைசி பந்து வரை போராடுவேன்- பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து இம்ரான் கான் கருத்து

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.