“காலியாக உள்ள பணி இடங்களை உடனே நிரப்ப வேண்டும். உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்பை அதிகரிக்க, தனியாரை ஊக்குவிக்க வேண்டும் என, மத்திய அரசின் துறை செயலாளர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்,” என, மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவுபா தெரிவித்து உள்ளார்.
மத்திய அரசின் பல்வேறு துறைகளின் செயலாளர்களை, பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, செயலாளர்கள் பலர், பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள இலவச திட்டங்கள் குறித்து கவலை தெரிவித்தனர். ‘அவை பொருளாதார ரீதியாக நீடிக்க முடியாதவை; இந்த திட்டங்களால், இலங்கையில் ஏற்பட்டதை போல, அந்தந்த மாநிலங்களில் பொருளாதார நெருக்கடி ஏற்படக் கூடிய அபாயம் உள்ளது’ என குறிப்பிட்டனர்.
இந்நிலையில், மத்திய அரசின் துறை செயலாளர்களுக்கு, மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவுபா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘மத்திய அரசில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க, தனியார் துறையை ஊக்குவிக்க வேண்டும்’ என வலியுறுத்தினார்.
அதன்படி, தங்கள் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, செயலாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்க வேண்டும். தனியார் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.