விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வழியே மதுரைக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக விருதுநகர் குடிமைப்பொருள் வழங்கல் தடுப்புப்பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆய்வாளர் ஆல்பின் பிரிஜிட்மேரி தலைமையிலான போலீஸார் விருதுநகர் மாவட்டம் ஆவியூர், அருப்புக்கோட்டை பகுதியில் தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த லோடு ஆட்டோ ஒன்றைத்தடுத்து நிறுத்தி சந்தேகத்தின்பேரில் சோதனை நடத்தினர். இதில் அந்த வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திக்கொண்டு வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அதையடுத்து, வாகன ஓட்டுநரான மதுரையைச் சேர்ந்த மதன்குமாரை குடிமைப்பொருள் வழங்கல் தடுப்புப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். மேலும் வாகனத்தில் தலா 45 கிலோ எடையிலான 52 மூட்டைகளில் இருந்த 2,340 கிலோ ரேஷன் அரிசியையும், லோடு ஆட்டோவையும் பறிமுதல் செய்து விருதுநகர் கொண்டுவந்தனர்.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார் மதுரையைச் சேர்ந்த ராஜகணேஷ், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பிரபா ஆகிய மேலும் இருவரை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்குக்கு அனுப்பிவைக்கப்பட்டது.