சென்னை: சட்டப்பேரவையில் நேற்று ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதற்கு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பதில் அளித்துப் பேசினார். பின்னர் அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:
# குக்கிராமங்களை பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும்சந்தைகளுடன் இணைப்பதற்காக ரூ.1,346 கோடியில் சாலைமேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும். மாநில அரசு, மத்திய அரசின் நிதியுதவியுடன் ஊரகச் சாலைகளை தரம் உயர்த்த ரூ.874 கோடியில் 1,200 கி.மீ. சாலைகள், 136 மேம்பாலங்கள் அமைக்கப்படும்.
# எழில்மிகு கிராமங்களை உருவாக்க ரூ.431 கோடியில் சுற்றுச்சூழல் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படு்ம். ஊரகப் பகுதிகளில் ரூ.1,261 கோடியில் 12.50 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்.
# ரூ.683.95 கோடியில் 10 ஆயிரம் தடுப்பணைகள், 5 ஆயிரம் பண்ணை குட்டைகள் அமைக்கப்படும்.
# கிராம ஊராட்சிகளில் புதியகணினி, அச்சிடும் இயந்திரம், இணையவசதி ஏற்படுத்தப்படும்.
# ஊராட்சிகளில் மனைப் பிரிவுகளுக்கு அனுமதி, கட்டிட அனுமதி, தொழிற்சாலைகள் மற்றும் தொழில் தொடங்க அனுமதி உள்ளிட்ட அனைத்து அனுமதிகளும் ஒற்றைச் சாளரமுறையில் ஆன்லைன் மூலம் வழங்கப்படும்.
# கிராம ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய வீட்டுவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், விளம்பர வரி, உரிமக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் இணையவழியில் செலுத்த வசதிகள் ஏற்படுத்தப்படும்.
# தமிழகத்தின் மாநில மரமானபனைமர பரப்பை அதிகரிக்கவும்,பசுமை தமிழ்நாடு இயக்கத்தைமுன்னெடுத்துச் செல்லவும், ரூ.381.21 கோடியில் 25 லட்சம்பனை விதைகள், 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
# இரும்புச்சத்து குறைபாடு இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு முருங்கைமரக் கன்றுகள் வழங்கப்படும். கிராமப்புற குழந்தைகளுக்கு ரூ.59.85 கோடியில் 500 அங்கன்வாடி மையங்கள் கட்டப்படும்.
# ஊரக உள்ளாட்சி, ஊராட்சித்துறையின் திட்டப்பணிகளை செயல்படுத்தும் முன்களப் பணியாளர்களான மேற்பார்வையாளர்கள் (ஓவர்சீயர்) பணியிடங்கள் இனிமேல் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும்.
# நிலமற்ற ஏழைகளுக்கு அரசுபுறம்போக்கு நிலத்தில் ரூ.14.93கோடியில் கிராமப்புறங்களில் முதன்முறையாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்.
# புதிதாக 25 ஆயிரம் சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு அவற்றுக்கு ரூ.30 கோடி சுழல்நிதி வழங்கப்படும். ஊரகப் பகுதிகளில் 15 ஆயிரம் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.225 கோடி சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும். மேலும், சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடி கடனுதவி அளிக்கப்படும்.
# 45 ஆயிரம் இளைஞர்களுக்கு ரூ.170 கோடி செலவில் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும். மேலும், 20 ஆயிரம் இளைஞர்களுக்கு ரூ.20 கோடி செலவில் சுயதொழில் பயிற்சிகள் அளிக்கப்படும்.