சென்னை: ‘இந்தி மாநிலம்’ போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர் அமித் ஷா நினைக்கிறாரா? என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது, “நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக இந்தியை அலுவல் மொழியாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தியாவின் மொழியான இந்தியை வெவ்வேறு மாநிலங்களில் உள்ள குடிமக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள பயன்படுத்த வேண்டும். இந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு மாற்றாகக் கருத வேண்டும்; உள்ளூர் மொழிகளை அல்ல. இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், இந்திதான் நாட்டின் அதிகாரபூர்வ மொழியாகும்” என்று பேசி இருந்தார்.
அமித் ஷாவின் இந்தப் பேச்சைக் கண்டித்து #stophindiimposition என்று பலரும் ட்விட்டரில் டிரெண்ட் செய்த நிலையில், அவருக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் கண்டனத்தை பதிவுச் செய்தி வருகின்றனர்.
அந்த வகையில் அமித் ஷாவின் பேச்சுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள்” என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல். இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது.
‘இந்தி மாநிலம்’ போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர் அமித் ஷா நினைக்கிறாரா? ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது! ஒற்றைத்தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது. ஒரே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள். ஆனால், அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள்” என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்