மதுரா: “அடுத்த பத்தாண்டுகளில் நாடு இந்துக்கள் இல்லாத இந்தியாவாக மாறுவதைத் தவிர்க்க, இந்துக்கள் அதிகமாக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்“ என யதி நரசிங்கானந்த் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.
கடந்த ஆண்டு ஹரித்வாரில் நடத்தப்பட்ட தர்ம சன்சத் நிகழ்ச்சியில், முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சு பேசியதாக, அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த யதி நரசிங்கானந்த் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் அவர் விடுவிக்க்கப்பட்டார்.
இந்த நிலையில், காசியாபாத் தஸ்னா தேவி கோவிலின் தலைமைப் பூசாரியான நரசிங்கானந்த் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “2029-ல் இந்து அல்லாத ஒருவர் பிரதமராக வருவார் என்று ஒரு கணிதக் கணக்கீடு கூறுகின்றது. அப்படி ஓர் இந்து அல்லாதவர் பிரதமராக வந்தால், அதற்கடுத்த 20 ஆண்டுகளில் இந்தியா “இந்து விஹீன்” (இந்து இல்லாத) தேசமாக மாறும். நாடு இந்து இல்லாத இந்தியாவாக மாறுவதை தவிர்க்க, இந்துக்கள் அதிகமாக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும். இந்துத்துவாவை எழுப்பும் வகையில், ஆகஸ்ட் 12-14 வரை மதுரா கோவர்தன் பகுதிகளில் தர்ம சன்சத் நடத்தப்படும்” என்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள புராரி மைதானத்தில் நடந்த இந்து மகாபஞ்சாயத் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நரசிங்கானந்த், இந்தியாவில் முஸ்லிம் ஒருவர் பிரதமரானால் 20 ஆண்டுகளில் 50 சதவீதம் இந்துக்கள் மதம் மாறுவார்கள் என்றும், இந்துக்கள் ஆயுதம் ஏந்தி தங்களின் இருப்புக்காக போராட வேண்டும் என்றும் பேசியிருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்ததாக டெல்லி அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.