வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு: இலங்கைக்கு இந்திய ராணுவம் செல்லவிருப்பதாக கூறப்படுவது வதந்தி; அடிப்படை ஆதாரமற்றது என அந்நாட்டிற்கான நமது தூதர் கோபால் பாக்லே கூறியுள்ளார்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள், எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அங்கு அவசர நிலை அமல்படுத்தப்பட்டு பின்னர் திரும்ப பெறப்பட்டது. இதனிடையே, போராட்டத்தை கட்டுப்படுத்த இலங்கைக்கு இந்திய ராணுவம் செல்ல உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல் வெளியானது. இதனை இந்திய தூதர் மற்றும் இலங்கை அரசு திட்டவட்டமாக மறுத்தது.
இந்நிலையில், இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே கொழும்புவில் நிருபர்களிடம் கூறியதாவது: இலங்கைக்கு இந்திய ராணுவம் செல்ல உள்ளதாக கூறப்படுவது வதந்தி. அடிப்படையற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு மனிதநேய உதவிகளை வழங்க இந்தியா முன்வந்துள்ளது. கடல்வழியில், இந்தியாவின் நெருங்கிய நாடாக இலங்கை உள்ளது. அதனுடனான உறவுகள், இந்திய வெளியுறவு கொள்கை அமைந்துள்ளது. கோவிட் சூழலுக்கு பின், பொருளாதார மீட்சிக்காக இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement