புதுடெல்லி: இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான உணவு மற்றும் பொருளாதார நெருக்கடியால், மக்கள் தொடர்ந்து போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மக்கள் கோரி வருகின்றனர். இந்நிலையில் இலங்கையில் தத்தளித்து வரும் மக்களுக்கு பல்வேறு உதவிகளை இந்தியா செய்து வருகிறது. ஏற்கனவே இந்தியாவில் இருந்து அரிசி அனுப்பப்பட்ட நிலையில், இதுவரை 2.7 லட்சம் மெட்ரிக் டன் எரிபொருள் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா வெளியிட்ட அறிப்பில், ‘எங்களது பக்கத்து வீட்டாரும், மூத்த சகோதரருமான இந்தியா எப்போதும் எங்களுடன் இருக்கும். இந்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். தற்போதைய சூழ்நிலையில் இந்த நெருக்கடியிலிருந்து மீள்வது எளிதான காரியம் அல்ல. இந்தியா எங்களை மீட்க வரும்; விரைவில் அதிலிருந்து மீண்டு வருவோம் என்று நம்புகிறோம்’ என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே இலங்கையின் நிலைமை மேலும் மோசமடையலாம் என இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா அபேயவர்தன கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியானது ஆரம்ப நிலையில் உள்ளது. இனிவரும் நாட்களில் மக்கள் பட்டினி கிடப்பார்கள். உணவு, எரிவாயு மற்றும் மின்சார பற்றாக்குறை இன்னும் மோசமாகும்’ என்றார்.