வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு,-இலங்கையில் ஏற்பட்டு உள்ள அன்னிய செலாவணி தட்டுப்பாட்டை சமாளித்து, நிலைமையை மீட்டெடுக்க, பொருளாதார நிபுணர்கள் அடங்கிய ஆலோசனை கமிட்டியை அந்நாட்டு அரசு அமைத்துள்ளது.
இலங்கையில் வரலாறு காணாத வகையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு, தொடர் மின்வெட்டு போன்ற காரணங்களால் மக்கள் கொந்தளித்தனர். இதையடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்தா ராஜபக்சே தவிர, அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்தனர்.
புதிதாக நியமிக்கப்பட்ட நிதி அமைச்சர் அலி சப்ரி ஒரே நாளில் பதவியை ராஜினாமா செய்த நிலையில் புதிய அமைச்சர் இன்னும் நியமிக்கப்படவில்லை.இந்நிலையில், நாட்டின் பொருளாதார நிலையை மீட்டெடுக்க, நிபுணர்கள் அடங்கிய ஆலோசனை கமிட்டியை இலங்கை அரசு நேற்று நியமித்தது.அதன் விபரம்:அதிபர் நியமித்துள்ள ஆலோசனைக் குழு, இலங்கை தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிதியத்திடம் கடன் பெறுவது தொடர்பாக அதிகாரிகளுடன் பேச்சில் ஈடுபடும். நாட்டில் நிலையான, நீடித்த வளர்ச்சிக்கு சரியான வழிகாட்டுதல்களை வழங்கும்.
இக்குழுவில் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் கவர்னர் இந்திரஜித் குமாரசுவாமி, இலங்கையின் ஜார்ஜ் டவுன் பல்கலை., பேராசிரியரும், உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணருமான சாந்தா தேவராஜன், சர்வதேச நிதியத்தின் திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் ஷர்மினி கூரே உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை பயணம்: அமெரிக்கா எச்சரிக்கைஅமெரிக்க பயணியருக்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டு உள்ள அறிக்கை:இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், பெட்ரோலிய பொருட்கள், சமையல் ‘காஸ்’ உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. தொடர் மின்வெட்டு உள்ளது.நாடு முழுதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. பயங்கரவாத தாக்குதல் நிகழவும் வாய்ப்புள்ளது. எனவே, இலங்கை பயணத்துக்கு திட்டமிடும் அமெரிக்கர்கள் முடிந்தவரை அதை தவிர்க்கவும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘மாஜி’ வங்கி கவர்னருக்கு தடை!இலங்கை மத்திய வங்கியின் கவர்னராக பதவி வகித்து வந்த அஜித் நிவர்த் கப்ரால், 67, சமீபத்தில் தன் பதவியை ராஜினாமா செய்தார். இவர், 2006 – 15 வரை மத்திய வங்கி கவர்னராக பதவி வகித்த போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, சமூக ஆர்வலர் கீர்த்தி டென்னகூன் என்பவர் கொழும்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த நீதிமன்றம் வரும் 18ல் கப்ராலை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது. மேலும் அவர் வெளிநாடு பயணம் மேற்கொள்ள தடை விதித்தது.
Advertisement