இலங்கையில் போராட்டங்களுக்கு பயந்து வீடுகளை விட்டு வெளியேறி முன்னாள் அமைச்சர்கள் ஓட்டல்களில் தஞ்சமடைவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், மருத்துவமனைகளில் அவசரகால சிகிச்சை அளிக்க போதுமான மருந்து இல்லை என மருத்துவக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் உணவுகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், வரும் மே மாதத்தில் இலங்கையில் உணவு பற்றாக்குறை ஏற்படும் என அந்நாட்டின் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான எரான் விக்கிரம ரத்ன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இலங்கையில் உள்ள மருத்துவமனைகளில் அவசரகால சிகிச்சை அளிக்க போதுமான மருந்துகள் இல்லை என தேசிய மருத்துவக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்தில், மருந்து விநியோகம் சீரடையாவிட்டால், அதிக உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
இதனிடையே, விலை வாசி உயர்வு உள்ளிட்டவற்றிற்காக அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்தா ராஜபக்சே மற்றும் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளையும், அலுவலகங்களையும் முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக, முன்னாள் அமைச்சர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டல்களில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
அரசு நிதி நெருக்கடியைத் தீர்க்க வேண்டும் என்றும் நிர்வாகத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்திய சஜித் பிரேமதாச, இல்லையெனில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்றார்.
மன்னார் பகுதியில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மண்ணெண்ணெய் உள்ளிட்டவற்றை வாங்க பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட நூற்றுகணக்கானோர் வரிசையில் காத்திருந்தனர். அதேபோல், டீசல்களை நிரப்ப எரிபொருள் நிலையங்களுக்கு வெளியே நீண்ட வரிசையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
வரலாற்றில் முதல் முறையாக டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு பெரும் சரிவை சந்தித்துள்ளன.