மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்த பின்பு ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “பாரதிய ஜனதா கட்சி, ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்திற்கு (ஆர்.எஸ்.எஸ்) எதிராக அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து நம் கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
நாடு மிகவும் மோசமான சூழ்நிலையில் உள்ளது, வெறுப்பு பரப்பப்படுகிறது, நாடு பிளவுபடுகிறது என்று சரத் யாதவ் இன்று கூறினார். ஆம், அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். நாம் தேசத்தை ஒன்றிணைத்து சகோதரத்துவ பாதையில் மீண்டும் நடக்க வேண்டும். இது நமது வரலாற்றின் ஒரு பகுதியாகும்.
கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் ஊடக நிறுவனங்கள், பா.ஜ.க தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ் ஆகியவை உண்மையை மறைத்துவிட்டன. ஆனால், மெல்லமெல்ல உண்மை வெளிவரும். அதுதான் இப்போது இலங்கையில் நடக்கிறது. அங்கே உண்மை வெளிவந்துவிட்டது. இந்தியாவில் உண்மை விரைவில் வெளிவரும். முன்பு ஒரே தேசமாக இருந்தது, இப்போது அவர்கள் தேசத்திற்குள் பல நாடுகளை உருவாக்கியுள்ளனர்.
அனைவரும் ஒருவரையொருவர் எதிர்த்து நிற்கிறார்கள். இது வன்முறையைத் தூண்டும். இந்தியாவின் பொருளாதார நிலை மற்றும் வேலைவாய்ப்பு உங்களால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இருக்கப்போகிறது. நாட்டில் வேலைவாய்ப்பு கட்டமைப்பின் முதுகெலும்பு உடைந்து விட்டது. சிறு மற்றும் நடுத்தர வர்த்தகம், சிறு கடைக்காரர்கள், முறைசாரா துறைகள் ஆகியவை இந்த நாட்டின் முதுகெலும்பு. பொருளாதார வல்லுநர்களும், அதிகார வர்க்கமும் மற்ற நாடுகளைப் பார்த்து தங்கள் திட்டங்களைத் தீட்டுகிறார்கள்.
நாம் அவர்களைப் போல் ஆக வேண்டுமென்று பிரதமர் கூறுகிறார். ஆனால் இந்தியாவில் அப்படிச் செய்ய முடியாது. முதலில் நாம் யார் இங்கே என்ன நடக்கிறது என்பதை நாம் உணரவேண்டும். அடுத்து மூன்று நான்கு ஆண்டுகளில் திகிலூட்டும் பயங்கரமான சம்பவங்கள் இந்தியாவில் நடைபெறும். நாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. வெறுப்பு பரப்பப்பட்டு நாடு பிளவுபடுகிறது. இவற்றை நீங்கள் இப்போது நம்ப வேண்டாம் 2 அல்லது 3 ஆண்டுகள் காத்திருங்கள்” எனப் பேசினார்.