கீவ்: உக்ரைனில் ரயில் நிலையம் ஒன்றில் ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 39 பேர் கொல்லப்பட்டனர்; 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இது குறித்து உக்ரைன் அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, “டான்பாஸ் மாகாணத்தில் ரஷ்ய படைகளிடமிருந்து தப்பிக்க கிராமடோர்ஸ்கில் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் பொதுமக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர். அப்போது அந்த ரயில் நிலையத்தை குறிவைத்து ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் 39 பேர் கொல்லப்பட்டனர்; 100-க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்தனர். இறந்தவர்களில் 4 பேர் குழந்தைகள்” என்று தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் இந்தத் தாக்குதலை ‘சாத்தான்களுக்கு எல்லையில்லை’ என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடுமையாக சாடியிருக்கிறார். இந்தத் தாக்குதலுக்கு ரஷ்யா தரப்பில் இதுவரை பதிலளிக்கப்படவில்லை.
உக்ரைன்மீது ரஷ்யா போரைத் தொடங்கி 40 நாட்கள் கடந்துவிட்டன. ரஷ்யாவுக்கும் மேலை நாடுகளுக்கும் நீண்ட காலமாக நடந்துவரும் அதிகாரப் போட்டியில் இப்போது உக்ரைன் பலியாகியிருக்கிறது. ராணுவத் தளங்களை மையமிட்டுத் தாக்குதல் நடத்திவந்த ரஷ்யா, இப்போது குடியிருப்பு வளாகங்களின் மீதும் குண்டுகளை வீசி வருகிறது.இதில் ஏராளமான உயிர்கள் பலியாகி வருகின்றன.
ரஷ்யா நடந்தும் போர் காரணமாக, உக்ரைனிலிருந்து 40 லட்சம் பேர் அண்டை நாடுகளுக்கு வெளியேறியுள்ளனர். அவர்களில் 90% பேர் பெண்கள், குழந்தைகள். இதுதவிர 60 லட்சம் பேர் உள்நாட்டிலேயே வாழ்விடத்திலிருந்து வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.