கீவ்,:உக்ரைனின் கிரமாடோர்ஸ்க் நகரில் உள்ள ரயில் நிலையம் மீது, ரஷ்ய படையினர் ஏவுகணைகளை வீசி நடத்திய தாக்குதலில், 39 பேர் உயிரிழந்தனர்; 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, பிப்ரவரி 24ம் தேதி முதல், ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு உக்ரைன் ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இதில் இருதரப்பிலும் ஏராளமான வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில், கிரமாடோர்ஸ்க் நகரில் உள்ள ரயில் நிலையத்தின்மீது நேற்று, ரஷ்ய படையினர் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.இதில், 39 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இந்த தாக்குதல் நடந்தபோது, ரயில் நிலையத்தில், 1,000க்கும் மேற்பட்டோர் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியதாவது: மனிதாபிமானமற்ற ரஷ்ய படையினர், தங்கள் முறையை மாற்றிக்கொள்ளவே இல்லை. உக்ரைன் வீரர்களை துணிச்சலுடன் எதிர்த்து போரிட முடியாத அவர்கள், கோழைத்தனமாக பொதுமக்கள் இருக்கும் இடங்களை குறிவைத்து கொடூர தாக்குதல் நடத்துகின்றனர். அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement