சீனாவில் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ள கடுமையான ஊரடங்கு, உக்ரைனில் ரஷ்யா தொடுத்துள்ள போர் முதலானவை உலகின் வளர்ச்சிக்கான அச்சுறுத்தல்களாக இருந்தாலும், 2022-ல் பொருளாதார மந்தநிலை வர வாய்ப்பில்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மீண்டுமொரு பொருளாதார மந்தநிலையை நோக்கி நகர்கிறதா உலகம்? – கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து உலகப் பொருளாதாரம் மெல்ல மீண்டு வரும் நிலையில், வளர்ந்து வரும் அபாயங்களின் பட்டியல் பொருளாதார வளர்ச்சிக் கண்ணோட்டத்தை மறைக்கவே செய்கின்றன. இருந்தாலும் ஒப்பீட்டு அளவில் இந்த ஆண்டு பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கு சாத்தியமில்லை என பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இருந்தாலும், உக்ரைன் போர், ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள், சீனாவின் ஜீரோ கோவிட்-19 கொள்கைகள், பணவீக்கம், அமெரிக்காவின் மத்திய வங்கியின் வட்டி விகித உயர்வு போன்ற காரணங்கள் 2022-ம் ஆண்டின் வளர்ச்சிப் போக்கை கட்டாயம் குறைக்கும். மோசமடைந்து வரும் இந்த நிலைமைகள், சரியாக ஆராய்ந்து பார்க்காமல் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகள், தற்போதைய நிலையை மேலும் தீவிரமாக்குமா என்பதே இப்போது பெரும் கேள்வியாக உள்ளது.
“ஒரு சிறந்த முன்னறிவிப்பாளரால் கூட பொருளாதார மந்தநிலையை முன்கூட்டியே தீர்மானப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. உதாரணமாக மத்திய வங்கிக்கு நாம் பின்னடைவைச் சந்திக்கும்போது மட்டுமே பொருளாதார மந்தத்தை உணர முடியுமே தவிர, முன்கூட்டியே கணிக்க முடியாது” என்கிறார் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக்கத்தின் பொருளாதாரப் பேராசிரியரான தாரா சின்க்ளேர்.
பொதுவாக கொள்கை முடிவெடுப்பவர்கள், தங்களின் முன்தீர்மானங்களில் மந்தநிலையை குறைத்து சாதாரண காலங்களில் உள்ள பொருளாதாரத்தை கணிப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.
அமெரிக்காவின் மத்திய வங்கி, பணவீக்கத்தை குறைக்க சிக்கலான பணிகளை சந்தித்து வருகிறது. அதாவது, கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. இல்லையென்றால் அது பொருளாதார மந்தநிலைக்கு வழிவகுத்திருக்கும். மத்திய வங்கி பொருளாதார மந்தநிலையை தவிர்ப்பதற்காக இத்தகைய முடிவுகளை எடுப்பது இது முதல் முறை இல்லை. இதுபோல கடந்த 1994-ம் ஆண்டிலும் நடந்துள்ளதாக பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் வாதிடுகின்றனர். அப்போதைய மத்திய வங்கியின் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பான், பொருளாதார வளர்ச்சியைக் கொல்லாமல் பெஞ்ச்மார்க் விகிதத்தை இரட்டிப்பாக்கினார்.
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தை உடைய நாடான சீனாவில், கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சென்ற ஆண்டில் பதிவாகியுள்ள வேகமான பொருளாதார வீழ்ச்சி, உலக அளவில் எதிரொலிக்கலாம். இதனால் கோவிட் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் 4.3 சதவீதம் குறைந்துள்ள உலக பொருளாதார வளர்ச்சி நிலை மீண்டும் சரிவைச் சந்திக்கும் அபாயம் உள்ளது.
அமெரிக்க மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் பில் டுட்லி, கடந்த மாதம் எழுதிய கட்டுரை ஒன்றில், “மத்திய வங்கி தனது கொள்கைகள் இறுதி செய்ய நீண்ட நாட்கள் எடுத்துக் கொண்டதால், தற்போது ஒரு பொருளாதார மந்தம் தவிர்க்க முடியாதது” என எச்சரித்திருந்தார்.
அதேபோல, அமெரிக்க மத்திய வங்கியின் தலைவரான ஜெரோம் பாவெல், “கடந்த மாத்தில் நான்கில் ஒரு பங்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்ட பின்னர், பணவீக்கத்தை குறைப்பதற்காக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு மட்டும், மேலும் 6 முறை வட்டி விகிதம் உயர்த்தப்படலாம்” என்று வலியுறுத்தியிருந்தார்.
பொருளாதார மந்தம் குறித்த மற்றுமொரு அறிகுறி, குறுகிய மற்றும் நீண்ட கால அமெரிக்க கடன் பத்திரங்களின் வட்டி விகிதத்தின் வளர்ச்சிக் குறியீடு தலைகீழாக மறியிருப்பதாகும். இது, எதிர்கால வாய்ப்புகள் குறித்து முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள் என்பதற்கான அறிகுறியாகும்.
முதலீட்டாளர்கள் சந்தைகளில் பங்குகளை வாங்குவதைத் தவிர்த்து குறைந்த ஆபத்துள்ள கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும்போது இதுபோன்ற தலைகீழ் வளர்ச்சி நிலை உருவாகும். இதுபோன்ற நிலை அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள 8 பொருளாதார மந்தநிலைகளில் கடந்த 1955-க்கு முன்பாக நடந்துள்ளது. இருந்தபோதிலும், ஒவ்வொரு தலைகீழ் விளைவு மற்றும் வீழ்ச்சிக்கு இடையேயான இடைவெளிகள் வேறுபடுகின்றன.
உண்மையான ஆபத்து: இதுகுறித்து மந்தநிலையை கணிக்க தலைகீழ் விளைவைப் பயன்படுத்தியவர்களில் முன்னோடியான கேம்பெல் ஆர் ஹார்வி கூறும்போது, “காலாண்டு முழுவதும் வளர்ச்சி கோடு தலைகீழாக நீடிக்காததால், அது இன்னும் முழுமையான சுருக்கத்தை சுட்டிக்காட்டவில்லை. இருந்தாலும் மந்தநிலை ஏற்படுவதற்கான முழு ஆபத்துகள் உள்ளன” என்றார். மேலும் அவர், அமெரிக்க மத்திய வங்கி, மந்தநிலைக்கு எதிரான நடவடிக்கையில் மிகுவும் மந்தமாக செல்படுவதாக விமர்சகர்கள் கூறும் குற்றச்சாட்டுகளை தானும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.
கடந்த மாதத்தில், CNBC சார்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், அமெரிக்காவிலுள்ள வயதுவந்தோரில் 81 சதவீதம் பேர் இந்த ஆண்டு பொருளாதார மந்தநிலை ஏற்படும் என நம்புவதாக தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர்மறையாக, கோல்மேன் சாச்ஸ் சேர்ந்த பொருளாதார நிபுணர்கள் அமெரிக்காவின் மந்தநிலையின் அடுத்த ஆண்டில் 20-35 சதவீதம் மட்டும் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சிட்னி தொழில்நுட்ப பல்கலைகழகத்தின் பொதுக்கொள்கை மற்றும் ஆளுகைக்கான நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர் டிம் ஹார்கோர்ட் கூறும்போது, “பைடனின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகள், அவரது ஜனநாயக கட்சியினரைக் காப்பாற்றாது; ஆனால், அமெரிக்க பொருளாதாரத்தைக் காப்பாற்றும். ஷங்காய் நகரத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் சீனாவின் பொருளாதாரம் பாதிக்கப்படும்” என்றார்.
உக்ரைனில் நடக்கும் போர் மற்றும் ரஷ்யாவின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளைளின் பாதிப்புகளை உலகப் பொருளாதாரம் ஒப்பீட்டு அளவில் இதுவரை சமாளித்துவிட்டாலும், வரும் மாதங்களில் அதனால் ஏற்படும் விளைவுகள் பொருளாதாரத்திற்கான ஆபத்துக் காரணிகளாக இருக்கும். ரஷ்யாவின் எரிசக்தி மீதான தடையை மட்டும் ஐரோப்பா எதிர்க்கிறது. நிலக்கரி மீது மட்டுமே அவை அதிக கவனம் செலுத்தி வருகிறன. ஆனாலும், 40 சதவீதம் மற்றும் கண்டத்தின் விநியோகத்தில் மூன்றில் ஒரு பங்கு கொண்ட எரிவாயு மற்றும் எண்ணெய்க்கான கட்டுப்பாடுகளை நீடிக்க ஆதரவு அதிகரித்து வருகின்றன.
ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் தலைவர் சார்லஸ் மைக்கேல் புதன்கிழமை ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பேசும்போது, எண்ணெய் மற்றும் எரிவாயுவை இலக்காக கொண்ட நடவடிக்கைகள் தற்போதோ அல்லது பின்னரோ தேவைப்படலாம் என்று தெரிவித்தார்.
சீன அரசு கோவிட் 19 பெருந்தொற்று பரவுதை தடுக்க கடுமையான ஊரடங்கு மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு விதிகளை தீவிரமாக கடைபிடித்து வருகிறது. இதற்கிடையில், நாட்டின் இந்த மோசமான நிலைமை உள்நாட்டு நுகர்வு மற்றும் உலகளாவிய வர்த்தகத்திற்கு இடையூறாக மாறிவருகின்றன. ஷங்காயில் உள்ள உலகின் பரபரப்பான கண்டெய்னர் துறைமுகம் இரண்டு வாரங்களுக்கு மேலாக ஊரடங்கு காரணமாக பூட்டப்பட்டுள்ளதால், நூற்றுக்கணக்கான சரக்கு கப்பல்கள் தங்களுடை சரக்குகளை இறக்க வழியில்லாமல் சில வாரங்களாக துறைமுகத்தில் காத்திருக்கின்றன.
ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் சீனப் பொருளாதரம் குறித்த நிபுணரான கார்ஸ்டன் ஹோல்ஸ் கூறுகையில், “சீனா தனது இந்த ஆண்டுக்கான அதன் வளர்ச்சி இலக்கான 5.5 சதவீதத்தை எட்ட வாய்ப்பு இல்லை. சீனக் குடியாரசு பூஜ்ஜியம் கோவிட் சூழ்நிலைக்கு தற்போதைக்கு திரும்ப வாய்ப்பு இல்லை என்பதால், நாட்டின் விநியோகச் சங்கிலிகள் தொடர்ந்து பாதிக்கப்படும். இதனால் பொருள்களின் விலைகள் உயரும். இது ஐரோப்பிய மத்திய வங்கிகள் தங்களின் வட்டி விகிதத்தை உயர்த்த அழுத்தம் கொடுக்கும். இந்த வட்டி விகித உயர்வு மந்தநிலைக்கு வழிவகுக்கும் என்பது பெரும்பாலும் தேவையைப் பொறுத்து அமையும். தற்போது அவை தொடர்ந்து வலுவாக இருப்பதாகவே தோன்றுகிறது. மேற்குலகில் தற்போது நீடிக்கப்பட்டுள்ள கோவிட் 19 கட்டுப்பாடுகள் காரணமாக தேவை அதிகரித்துள்ளதாக தெரியவில்லை.
கூலி – விலை சுழற்சி பொருளாதார மந்தநிலையை விட அதிகம் போல தோன்றும். அந்த குமிழி எப்போதும் வெடிக்காது எனச் சொல்ல முடியாது. அது பங்குச்சந்தை குமிழியாக இருந்தாலும் சரி, ரியல் எஸ்ட்டேட் குமிழியாக இருந்தாலும் சரி. மதிப்புகளில் கூர்மையான வீழ்ச்சி ஏற்பட்ட பின்னரே குமிழி என்ன என்று தீர்மானிக்க முடியும் என்பதே இங்கு எப்போதுமே இருக்கும் ஆபத்து.
இருப்பினும் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான பொருளாதாராக் கணிப்புகள் உத்வேகம் தருவதாக இருக்கின்றன. ஆசிய வளர்ச்சி வங்கி புதன்கிழமை வெளியிட்ட அதன் பொருளாதாரக் கண்ணோட்டத்தில், வளர்ந்து வரும் ஆசியாவின் பொருளாதாரம், 2022-ம் ஆண்டு 5.2 சதவீதமும், 2023-ம் ஆண்டில் 5.3 சதவீதமும் உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஹாங்காங்கில் உள்ள ஆசியாவிற்கான நாடிக்ஸிசின் மூத்த பொருளாதார நிபுணர் டிரின் நகுயென் கூறுகையில்,” 2022-ல் உலகில் பொருளாதார மந்தநிலை ஏற்படுவது சாத்தியமில்லாதது.
ஆசியாவிற்கான நல்ல செய்தி என்னவென்றால், பூஜ்ஜியம் கோவிட் 19 கொள்கையுடைய சீனாவைத் தவிர மற்ற இடங்களில், உண்மையான குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் இயல்பான நடவடிக்கைகள் உள்ளன. இது பொருளாதார தாக்கத்தை சமாளிக்க எங்களுக்கு உதவும். என்றாலும், பொருள்களின் விலையுயர்வு, டாலருக்கு நிகரான மதிப்பு அதிகரிப்பு காரணமாக இறுக்கமடையும் நிதிநிலைமை, சீனாவில் நிலவி வரும் மந்த நிலை ஆகியவை வளர்ச்சி வேகத்தை குறைக்கின்றன” என்றார்.
தகவல் உறுதுணை: அல்ஜசீரா