புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில் பரேலி மாவட்டத்தில் உள்ள போஜ்புரா தொகுதியில் இருந்து சமாஜ்வாதி எம்எல்ஏவாக ஷாஜி இஸ்லாம் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு போஜ்புராவின் பர்சக் கேடா பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. பரேலி வளர்ச்சி ஆணையத்திடம் (பிடிஏ) கட்டிட வரைபட அனுமதி பெறாமல் இது கட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து 2 ஆண்டுகளுக்கு முன் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதற்கு ஷாஜி இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. தனது அரசியல் அதிகாரத்தை காட்டி அதிகாரிகளை அவர் மிரட்டி வந்ததாகத் தெரிகிறது. இந்தச் சூழலில் நேற்று காலை புல்டோசருடன் சென்ற பிடிஏ அதிகாரிகள், பெட்ரோல் பங்க் கட்டிடத்தை இடித்து அகற்றினர்.
எம்எல்ஏ.வான பிறகு கடந்த 2-ம் தேதி, பரேலியில் கட்சிக் கூட்டம் ஒன்றில் ஷாஜி பேசினார். அப்போது, “யோகியின் பேச்சைக் கேட்டு எங்கள் துப்பாக்கியில் வெறும் புகை வராது, மாறாக குண்டுகள் பொழியும்” என்று ஷாஜி பேசினார். இது சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் ஷாஜியின் பெட்ரோல் பங்க் விவகாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு நடவடிக்கை நேற்று திடீரென அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர காஜியாபாத்தின் 3 பகுதிகளில் முன் அனுமதி பெறாத கட்டிடங்களும் நேற்று இடிக்கப்பட்டுள்ளன.
இதுபோன்ற அதிரடி நடவடிக்கை முதல்வர் யோகியின் கடந்த ஆட்சியில் தொடங்கியது. குற்றப் பின்னணி அரசியல்வாதியான விகாஸ் துபே, தன்னைப் பிடிக்க வந்த கான்பூர் போலீஸ் படையினர் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில் ஒரு டிஎஸ்பி, 2 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 8 போலீஸார் உயிரிழந்தனர்.
இதையடுத்து விகாஸ் துபே, என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதுடன் அவரது சட்டவிரோத சொத்துக்கள் கைப்பற்றப்பட்டன. அனுமதி பெறாத அவரது கட்டிடங்களும் இடித்து தள்ளப்பட்டன. குற்றப் பின்னணி கொண்ட பலரது கட்டிடங்கள் தொடர்ந்து இடிக்கப்பட்டதால் ‘புல்டோசர் பாபா’ என முதல்வர் யோகி அழைக்கப்பட்டார். இந்நிலையில் யோகியின் அதிரடி நடவடிக்கை அவரது இரண்டாவது ஆட்சியிலும் தொடர்வதாக கருதப்படுகிறது.