கொழும்பு: இலங்கையில் நடுத்தர வர்க்கத்தினர் மெல்ல மெல்ல அழிந்து வருவதை உணர்கிறேன், எங்கள் நேரம் கடந்து விட்டது, இந்தியா எங்களுக்கு அண்ணன் போல ஆதரவு காட்டுகிறது என இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஷன் மகாநாம நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அரசுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் விக்கெட் கீப்பர் சங்ககரா உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நெருக்கடியான நேரத்தில் இலங்கைக்கு உதவி செய்து வரும் இந்திாவுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் அமைச்சருமான, அர்ஜூன ரணதுங்கா, சனத் ஜெயசூர்யா உள்ளிட்டோர் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து இருந்தனர்.
இந்தநிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அதன் பின்னணி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஷன் ஹாநாம பேட்டியளித்துள்ளார். இலங்கையின் நடுத்தர வர்க்கம் மெதுவாக அழிக்கப்பட்டு வருவதாகவும், இக்கட்டான சூழ்நிலைக்கு தீர்வு காண தலைவர்கள் முன்வராத வரை மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துவார்கள் என்று கூறினார்.
தற்போதைய ஆட்சியை விமர்சித்த அவர் மாற்றம் தேவை என உறுதிபட தெரிவித்தார். இலங்கை தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தலைவர்களே உருவாக்கி வருவதாகவும் காலம் கடந்து வருவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். 1996 உலகக் கோப்பையை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியில் அங்கம் வகித்தவர் மகாநாம மேலும் கூறியதாவது:
நான் ஒரு கிரிக்கெட் வீரராக இருந்தபோது இலங்கை மக்கள் எனக்கு நல்லநேரங்களிலும் மோசமான காலங்களிலும் உடன் இருந்துள்ளனர். அதனால் அவர்கள் சார்பாக வெளியே வந்து பேச வேண்டிய பொறுப்பு எனக்கு இருப்பதாக நான் நினைக்கிறேன். ஆம், நாங்கள் உண்மையில் ஒரு பெரிய நெருக்கடியை எதிர்கொள்கிறோம். இது மிகவும் அசாதாரண நெருக்கடி.
நான் நினைப்பது சரியாக இருந்தால் 1991 இல் இந்தியாவிலும் இதே போன்ற பிரச்சனை இருந்தது, இதனை என்னிடம் பலர் கூறியுள்ளனர். எனது பார்வையில் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல் என்பது நாட்டின் தலைவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு நெருக்கடி தான்.
நாட்டில் நடுத்தர வர்க்கத்தினர் மெல்ல மெல்ல அழிந்து வருவதை நான் உணர்கிறேன். கடைசியில் பெட்ரோல், டீசல், மின்சாரம், பால் பவுடர், அத்தியாவசியப் பொருட்கள் இல்லாத போது அனைவரும் தெருக்களில் இறங்கி போராடுகிறார்கள். தங்கள் குடிமக்களை அத்தியாவசிய தேவைக்காக போராடாமல் இருப்பதை இது தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும். ஆனால் அதுபோன்று செய்யவில்லை.
இலங்கையில் ஆட்சியில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று நான் எண்ணுகிறேன். இந்த கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு தீர்வை முன்வைக்க வேண்டும். அவர்கள் தீர்வுகளை விவாதிக்க வேண்டும். இந்த சூழ்நிலையில் இருந்து நாம் வெளியே வருவதற்கு அவர்களுக்கு அதிகமான பொறுப்பு உள்ளது.
காலம் கடந்து வருகிறது. இந்த முடிவுகளை எடுப்பதில் தலைவர்களுக்கு பொறுப்பு உண்டு. சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் வரை மக்களின் இதுபோன்ற போராட்டங்கள் தொடரத் தான் செய்யும். தலைவர்கள் தீர்வுகளுடன் வரத் தொடங்கும் வரை மக்கள் ஏமாற்றத்தைக் வெளிப்படுத்திக் கொண்டு தான் இருப்பார்கள்.
இந்தியா எப்பொழுதும் எங்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. நல்ல சமயங்களிலும், மோசமான காலங்களிலும் உற்ற நண்பனாக இந்தியா எங்களுக்கு துணை நிற்கிறது. இந்தியா எப்போதுமே மூத்த சகோதரன். பாகிஸ்தானுடனும், சீனாவுடனும் எங்களுக்கு நல்ல உறவு உள்ளது. அவர்கள் அனைவரின் ஆதரவும் எங்களுக்குத் தேவை. இதனை தவறான நோக்கத்கமாக பார்க்க வேண்டாம்
பொருளாதார நெருக்கடி மக்களை உண்மையில் பாதித்துள்ளது. மக்களில் சிலர் உணவைத் தவிர்க்கிறார்கள். சிலருக்கு உணவு மேசைக்கு வரும் நிலை இல்லை. தேடி அலைய வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது. வரிசையில் நிற்கும் அவல நிலை உள்ளது. மக்கள் மிகவும் ஒழுக்கமான பின்னணியில் இருந்து வந்தவர்கள். கட்டுப்பாட்டுடன் வரிசையில் நிற்கிறார்கள். எங்கள் குடும்பபத்தினரும் இதுபோல வரிசையில் நிற்கிறார்கள்.
துரதிர்ஷ்டவசமாக மக்கள் என்னைப் பார்க்கவில்லை. ஏனென்றால் என் மனைவி எனக்காக வரிசையில் நிற்கிறார். நான் அங்கு சென்றால் மக்கள் வந்து உதவுவார்கள் என்பதால் இதனை நான் தவிர்க்கிறேன். நான் மக்களுக்கு ஆதரவாக தெருக்களில் இறங்கியுள்ளேன்.
இந்தப் போராட்டத்தின் மூலம் ஒவ்வொருவரிடமும் செல்ல வேண்டும். அனைவரையும் ஒருங்கிணைத்து செயலாற்ற வேண்டும். இந்த போராட்டம் மக்களை வேறுபடுத்தவில்லை, ஒன்றுபடுத்தி இருக்கிறது. இது வரவேற்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.