"என்னை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினார்"- சாஹலை தொடர்ந்து மும்பை வீரர் மீது உத்தப்பா குற்றச்சாட்டு

மும்பை,
நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் யுஸ்வேந்திர சாஹல்  சமீபத்தில் மும்பை அணியின் வீரர் மீது பரப்பரப்பு குற்றசாட்டை முன்வைத்து இருந்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் விளையாடிய போது, ஒரு சீனியர் வீரர் 15வது மாடியில் இருந்து அவரை தள்ளிவிட முயன்றதாகவும், நூலிழையில் தப்பியதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அவரை தொடர்ந்து சென்னை அணியின்  முன்னணி வீரரான ராபின் உத்தப்பாவும் மும்பை அணி மீது குற்றம்சாட்டியுள்ளார்.
ராபின் உத்தப்பா கடந்த 2008ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். அப்போது தன்னை கட்டாயப்படுத்தி அணி நிர்வாகம் பத்திரத்தில் கையெழுத்து வாங்கியதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய ராபின் உத்தப்பா,” ஐபிஎல் தொடரில் முதன்முதலில் ஒரு அணியில் இருந்து மற்றொரு அணிக்கு விருப்பத்தின் பேரில் மாற்றப்பட்ட வீரர் நானாக தான் இருப்பேன். மும்பை அணியில் இருந்து என்னை ஆர்சிபிக்கு மாறிக்கொள்ளுமாறு கேட்டனர்.
நான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் மும்பை அணியை சேர்ந்த ஒருவர் நான் கையெழுத்திடவில்லை என்றால் மும்பை அணி பிளேயிங் 11ல் வாய்ப்பே தரமாட்டோம் என கட்டாயப்படுத்தினார். இதன்பின்னர் மும்பை மீது எனக்கு இருந்த விஸ்வாசம் நீங்கியது.
இதனால் 2009ல் ஆர்சிபிக்காக என்னால் ஒரு போட்டியில் கூட சிறப்பாக விளையாட முடியவில்லை. மன அழுத்தத்திலேயே இருந்தேன். அதன் பின்னர் எனக்கான வாய்ப்புகள் பறிபோய்விடும் என்பதை புரிந்துக்கொண்டு மீண்டும் சிறப்பாக விளையாட தொடங்கினேன் ” என தெரிவித்துள்ளார். அந்த வீரரின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.

சாஹலை தொடர்ந்து தற்போது மும்பை அணி தொடர்பாக எழுந்துள்ள அடுத்த குற்றச்சாட்டு கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.