கடந்த நிதியாண்டில் ஒன்றிய அரசுக்கு வரி வருவாய் ரூ.27.07 லட்சம் கோடி: 23 ஆண்டுகளில் இல்லாத உச்சம்

புதுடெல்லி: கடந்த நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவாக ஒன்றிய அரசுக்கு ரூ.27.07 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. ஒன்றிய பாஜ அரசு, எப்போதும் வரி வசூலில் தீவிரம் காட்டி வருகிறது. கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருந்த ஜிஎஸ்டி வசூல், ஒன்றிய அரசின் இலக்கான ரூ.1 லட்சம் கோடியை தாண்டி வசூலாகி வருகிறது. இருப்பினும் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய பங்கீட்டை வழங்குவதில் தாமதம் செய்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மேலும், மேற்கண்ட வரி வசூலை வேறு பயன்பாட்டுக்கு செலவு செய்ததாகவும் சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் வருவாய் பாதிக்கப் பட்டதாக கூறி வரும் நிலையில், கடந்த நிதியாண்டுக்கான வரி வசூல் அபார வளர்ச்சி கொண்டுள்ளது. முந்தைய நிதியாண்டை விட 34 சதவீதம் அளவுக்கு மொத்த வரி வருவாய் அதிகரித்துள்ளது. ஒன்றிய அரசுக்கு கடந்த நிதியாண்டில் கிடைத்த வரி வருவாய் குறித்து, வருவாய்த்துறை செயலாளர் தருண் பஜாஜ் நேற்று கூறியதாவது: கடந்த 2021-22 நிதியாண்டில் ஒன்றிய அரசுக்கு மொத்த வரி வருவாய் ரூ.27.07 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இது, இதுவரை இல்லாத அபார வசூலாகும். கடந்த பட்ஜெட் மதிப்பீடான ரூ.22.17 லட்சம் கோடியையும் தாண்டி வரி வசூலில் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதில் நேரடி மற்றும் மறைமுக வரி வருவாய் அடங்கும். தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து நேரடி வரியாக ரூ.14.10 லட்சம் கோடி வசூலானது. இது பட்ஜெட் மதிப்பீடை விட ரூ.3.02 லட்சம் கோடி அதிகம். இதுபோல், கலால் வரி உள்ளிட்ட மறைமுக வரி வருவாயாக ரூ.12.90 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இது பட்ஜெட் மதிப்பீடான ரூ.11.02 லட்சம் கோடியை விட ரூ.1.88 லட்சம் கோடி அதிகம். முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், நேரடி வரி வருவாய் 49 சதவீதமும், மறைமுக வரி வருவாய் 20 சதவீதமும் அதிகம். 2020-21 நிதியாண்டில் வரி வசூல் ஜிடிபியில் 10.3 சதவீதமாக இருந்தது, கடந்த நிதியாண்டில் 11.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 1999வது ஆண்டை விட உச்சபட்ச அளவாகும். அதாவது 23 ஆண்டுகளுக்கு பிறகு  வசூலில் சாதனை படைக்கப் பட்டுள்ளது. மேலும், இந்த வரி வசூல், பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருவதற்கான அடையாளமாக உள்ளது. மேலும், வரி ஏய்ப்பை கண்டறிந்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளாலும் வரி வசூல் அதிகரித்துள்ளது. வருமான வரி தாக்கல் மற்றும் ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் ஆகியவற்றை ஒப்பீடு செய்து பார்க்க ஏராளமான தொழில்நுட்பங்கள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், வரி கணக்கு தாக்கல் செய்வது அதிகரித்து, அதன்மூலம் வருவாயும் உயர்ந்துள்ளது. நேரடி மற்றும் மறைமுக வரி வருவாய் அதிகரித்ததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. வரும் நிதியாண்டுகளிலும் இதே நிலை தொடரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.நேரடி வரி வசூலை பொறுத்தவரை, நிறுவனங்களிடம் இருந்து ரூ.8.58 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட 56.1 சதவீதம் அதிகம். தனி நபர்களிடம் இருந்து வருமான வரியாக ரூ.7.49 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 43 சதவீத வளர்ச்சியாகும். கடந்த நிதியாண்டில் 2.43 கோடி நிறுவனங்களுக்கு, வருமான வரி ரீபண்டாக ரூ.2.24 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.மறைமுக வரிகளை பொறுத்தவரை, சுங்க வரியாக ரூ.1.99 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இது 48 சதவீத வளர்ச்சி. மத்திய ஜிஎஸ்டி 30 சதவீதம் அதிகரித்து ரூ.6.95 லட்சம் கோடியாக உள்ளது. அதேநேரத்தில், கலால் வரி முந்தைய நிதியாண்டை விட கடந்த நிதியாண்டில் 0.2 சதவீதம் குறைந்து ரூ.3.9 லட்சம் கோடியாக உள்ளது. ஜிஎஸ்டியில் வரி ஏய்ப்புகள் அதிகம் நடந்து வந்தன. போலி பில்கள் மூலம் உள்ளீட்டு வரி வரவு பெற்று மோசடி செய்து வந்தனர். இதற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக மோசடிகள் தடுக்கப்பட்டதால், ஜிஎஸ்டி வரி வசூல் கணிசமாக உயர்ந்துள்ளது. நடப்பு 2022-23 நிதியாண்டில், நேரடி வரி வசூல் ரூ.14.2 லட்சம் கோடியாக இருக்கும் எனவும், இதில் நிறுவன வரிகள் ரூ.7.2 லட்சம் கோடியாகவும், தனிநபர் வருமான வரி ரூ.7 லட்சம் கோடியாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோல் மறைமுக வரிகள் ரூ.13.3 லட்சம் கோடியாக இருக்கும். இதில் சுங்க வரியாக ரூ.2.13 லட்சம் கோடி, கலால் வரி ரூ.3.35 லட்சம் கோடி மற்றும் மத்திய ஜிஎஸ்டி, செஸ் ரூ.7.8 லட்சம் கோடியும் அடங்கும். உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் காரணமாக பொருளாதார பாதிப்பு நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், பொருட்களின் விலை மற்றும் விநியோகம் ஆகியவற்றை சார்ந்துதான் இது காணப்படும். இவ்வாறு தருண் பஜாஜ் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.