புதுக்கோட்டையில் அழிந்துவரும் மாடு இனங்களில் ஒன்றான தஞ்சாவூர் குட்டை இன மாட்டை வளர்த்து வரும் இளைஞர், 9 மாத கர்ப்பமாக உள்ள மாட்டிற்கு வளைகாப்பு நடத்தியது நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை திருவப்பூர் அருகே உள்ள கட்டியாவயல் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார். கால்நடை வளர்ப்பில் ஆர்வம்கொண்ட இவர் கடந்த 10 ஆண்டுகளாக அழிந்துவரும் மாடு இனங்களில் ஒன்றான தஞ்சாவூர் குட்டை இன மாடுகளை வளர்த்து வருகிறார். குறிப்பாக தற்போது இவர் வளர்த்துவரும் சக்தி என்ற பெயருடைய தஞ்சாவூர் குட்டைஇன மாட்டிற்கு நான்கரை வயதாகும் நிலையில் அந்த மாடு ஒன்பது மாதம் சினையாக உள்ளது.
மேலும் ஏற்கெனவே குட்டை இன மாடுகளில் தாய்ப்பசு பிரிவில் கேரளாவைச் சேர்ந்த மகாலட்சுமி என்ற மாடு 76 சென்டிமீட்டர் உயரத்துடன் கின்னஸ் சாதனைபடைத்த நிலையில் தற்போது மனோஜ்குமார் வளர்க்கும் சக்தி மாடு 67 சென்டி மீட்டர் மட்டுமே உயரத்தில் உள்ளதால் அந்த மாட்டை கின்னஸ் சாதனைக்காக மனோஜ்குமார் விண்ணப்பித்துள்ளார்.
இந்நிலையில் 9 மாதம் சினையாக உள்ள சக்தி என்ற தஞ்சாவூர் குட்டை இன மாட்டை மனோஜ்குமார் குடும்பத்தினர், தங்கள் வீட்டில் பெண் பிள்ளையாக நினைத்து வளர்ப்பதாகவும், அதனால் அதற்கு வளைகாப்பு நடத்த திட்டமிட்டு, அதன்படி ஐந்து வகையான சாதங்கள் சமைத்து, பல்வேறு வகையான பழங்கள் வைத்து, சந்தனம் குங்குமம் பூமாலை உள்ளிட்டவைகளால் மாட்டை அலங்கரித்து, மாட்டின் கால்களிலும் கொம்புகளிலும் வளையல் அணிவித்து ஆரத்தி எடுத்து முத்தமிட்டு மகிழ்ச்சியுடன் வளைகாப்பு நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் அழிந்து வரக்கூடிய தஞ்சாவூர் குட்டை இன மாட்டை வளர்ப்பது மகிழ்ச்சி தருவதாகவும், தங்கள் வீட்டில் செல்லமாக பெண் பிள்ளைபோல் வளர்த்துவரும் மாட்டிற்கு வளைகாப்பு நடத்தியது மனநிறைவை அளித்துள்ளது என்றும், தாய்ப்பசு பிரிவில் ஏற்கெனவே சாதனை படைத்த மாட்டைவிட இந்த மாடு உயரம் குறைவாக இருப்பதால் கட்டாயம் கின்னஸ் சாதனை புரியும் என்றும், அழிந்துவரும் மாட்டு இனங்களில் ஒன்றான தஞ்சாவூர் குட்டை இன மாட்டை அனைவரும் வளர்த்தெடுத்து அழிவிலிருந்து மீட்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பித்து இருப்பதாகவும் மனோஜ்குமார் கூறினார். மேலும் தமிழக அரசும் இதுபோன்ற மாடுகளை வளர்ப்பவர்களுக்கு ஊக்கமளித்து அழிந்துவரும் மாடு இனங்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM