இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் பாராளுமன்றத்தைக் கலைத்த அந்நாட்டு அதிபரின் உத்தரவு செல்லாது என்றும், சனிக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பை இம்ரான்கான் அரசு சந்திக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தால் இம்ரான்கான் அரசு கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் நாட்டு மக்கள் நாளை வீதிகளில் இறங்கிப் போராட வேண்டும் என அழைப்பு விடுத்தார். இதுதொடர்பாக இம்ரான்கான் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது:
இறக்குமதி செய்யப்பட்ட அரசை நான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. ஞாயிற்றுக்கிழமை மக்கள் வீதிகளில் இறங்கி போராட வேண்டும்.
நான் நீதித்துறையை மதிக்கிறேன். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வருத்தமளிக்கிறது. எதிர்க்கட்சிகள் குதிரை பேரத்தில் ஈடுபடுகின்றன. குதிரை பேரம் நடப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது,
நான் அமெரிக்காவுக்கு எதிரானவன் அல்ல ஆனால், ஒற்றைபக்க உறவு எங்களுக்கு தேவையில்லை. இந்தியாவை பாருங்கள்… வெளியுறவு கொள்கைகளில் எந்த நாடும் இந்தியாவுக்கு கட்டளையிடுவதில்லை.
பாகிஸ்தான் தலைவர்கள் அனைவரும் விலைக்கு வாங்கப்பட்டு பின்னர் விலை போய்விட்டனர். ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனது ஆட்சியைக் கவிழ்க்க சர்வதேச அளவில் சதி நடக்கிறது. குறிப்பாக, என்னை ஆட்சிக்கட்டிலில் இருந்து அகற்ற அமெரிக்கா துடிக்கிறது. இது போன்றவர்களிடமிருந்து பாகிஸ்தானைப் பாதுகாக்க வேண்டும்.
ஜனநாயகத்தைப் பாதுகாப்பது மக்கள் தானே தவிர, ராணுவம் அல்ல. மக்கள் முன் வந்து தேர்தலை அறிவியுங்கள். போராட நான் தயார் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்…வீடுகளை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்: இலங்கை அமைச்சர் தலைதெறிக்க ஓட்டம்