ஆந்திராவில் வறுமைக் கொடுமையின் காரணமாக பெற்றோர் தங்களது குழந்தைகள் விற்கும் அவலம் அதிகரித்து வருகிறது.
ஆந்திராவின் எல்லுரு, அஸ்வராப்பேட்டை, மங்களகிரி பகுதிகளில் கடந்த மூன்று நாட்களில் 2 குழந்தைகள் விற்கப்பட்டுள்ளனர். வறுமை காரணமாக குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள முடியாது என்று குடும்பத்தினர் கூறிவிட்டதால், குழந்தைகளை விற்றதாக தாய்மார்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். இந்த தொடர் நிகழ்வுகள் குறித்து எல்லுரு குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் மூத்த அதிகாரி சூர்யா கூறும்போது, “முன்பெல்லாம் தம்பதிகள் சட்டவிரோதமாக குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் சம்பவங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், தற்போது மாநிலத்தில் உள்ள சில கும்பல்களால் கைக்குழந்தைகள் சந்தையில் விற்பனைக்கு விடப்படுகின்றன. இது பரிதாபத்திற்குரியது.
குழந்தைகள் விற்கபடுவதில் பிரசவம் பார்க்கும் மருத்துவர்களும், மருத்துவமனை ஊழியர்களும் முக்கியப் பாங்காற்றுகிறார்கள். அவர்கள் இடைத்தரகர்களாக செயல்படுகிறார்கள். குழந்தைகள் ரூ.60,000 முதல் 5 லட்சம் வரைக்குமான தொகைக்கு விற்கப்படுகின்றனர். சட்டத்திற்கு விரோதமாக குழந்தைகள் விற்கப்படுவது தொடர்பாக 11 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தத்தெடுப்பு வள முகமை நிர்வாகக் குழு உறுப்பினர் பிரான்சிஸ் கூறும்போது, “மருத்துவர்களும், மருத்துவமனை ஊழியர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குடும்பத்தின் பொருளாதார நிலையை அறிந்துக் கொள்கிறார்கள். குடும்பம் வறுமையில் இருந்தால், குழந்தைகளை விற்பதற்காக பெற்றோர்களை மூளைச் சலவை செய்கிறார்கள். சில பெற்றோர்கள் இதில் சிக்கிக் கொள்கின்றனர்” என்றார்.
ஆந்திராவில் குழந்தை கடத்தல் சம்பவங்களை உடனடியாகத் தடுக்க பொறுப்பான அமைப்பை நியமிக்க வேண்டும் என்று அம்மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தித்திற்கு அதன் முன்னாள் உறுப்பினர் வி.காந்தி பாபு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்
இதற்கிடையில், மங்களகிரி மற்றும் அஸ்வராப்பேட்டையில் நடந்த இரண்டு ‘சிசு விற்பனை’ வழக்குகளை ஆந்திர உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. வழக்குகளின் விவரங்களை வரும் வியாழக்கிழமைக்குள் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.