உக்ரைன் பிணவறைகள் மற்றும் குளிரூட்டப்பட்ட வாகனங்களில் ரஷ்ய இராணுவ வீரர்களின் 7,000 சடலங்கள் இன்னும் பாதுகாக்கப்பட்டு வருவதாக முக்கிய அதிகாரி ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இதனால், ரஷ்ய துருப்புகளின் மொத்த இழப்பு 19,000 என உக்ரைன் தரப்பில் கூறப்படுகிறது.
உக்ரைன் ஜனாதிபதி அலுவலகத்தின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவரான Oleksiy Arestovych தெரிவிக்கையில், போரின் ஆரம்பத்தில் 3,000 ரஷ்ய வீரர்களின் உடல்களை அனுப்பி வைக்க முயன்றதாகவும்,
ஆனால் ரஷ்யா மறுப்பு தெரிவித்து, உயிரிழப்புகள் அதிகமாக இருப்பதாக நம்பவில்லை என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையிலேயே, கொல்லப்படும் ரஷ்ய வீரர்களின் புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை வெளியிட இணையதளம் ஒன்றையும், டெலிகிராம் செயலியில் குழு ஒன்றையும் உக்ரைன் அதிகாரிகள் நிறுவி, அதில் வெளியிட்டு வந்துள்ளனர்.
இருப்பினும் ரஷ்ய தரப்பில் நம்ப மறுத்து வருவதுடன், வெறும் 1,351 வீரர்கள் மட்டுமே உக்ரைனில் கொல்லப்பட்டதாக கூறி வந்துள்ளனர்.
இந்த நிலையில், விளாடிமிர் புடினின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் உக்ரைன் படையெடுப்பால் பேரிழப்பு ஏற்பட்டுள்ளதை இறுதியாக ஒப்புக்கொண்டார்.
மேலும் இது ரஷ்யாவுக்கு மிகப்பெரிய துயர நிகழ்வு எனவும் டிமித்ரி பெஸ்கோவ் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் நேட்டோ தரப்பில், 7,000 முதல் 15,000 வீரர்கள் வரையில் ரஷ்யா இழந்திருக்கும் என குறிப்பிட்டுள்ளது.
ரஷ்ய வீரர்களின் தாய்மார்கள் பலரும் தங்கள் மகன்களின் சடலங்களுக்காக காத்திருப்பதாகவே கூறியுள்ளனர். அதேவேளை உக்ரைன் தரப்பில், தங்கள் பிள்ளைகளின் சடலங்களை மீட்டுச் செல்ல ரஷ்ய தாய்மார்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் புடின் நிர்வாகம் அதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
மட்டுமின்றி, உக்ரைனில் போர் குற்றம் நடந்ததற்கான எந்த தரவுகளும் இல்லை எனவும், அனைத்தும் மேற்கத்திய நாடுகளின் சூழ்ச்சி எனவும், ரஷ்யாவை தனிமைப்படுத்த முன்னெடுக்கப்படும் நடகம் எனவும் டிமித்ரி பெஸ்கோவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.