‘கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ
கொண்ட குறியும் தவறிப் போனவர்கள் எத்தனையோ’
என்பது பந்தபாசப்படப் பாடல்.
‘கோடு போட்டு நிற்கச் சொன்னான்
சீதை நிற்க வில்லையே!
சீதை அங்கு நின்றிருந்தால்
ராமன் கதை இல்லையே!’
இது, கோட்டின் பெருமையை விளக்கும் மற்றொரு கருத்துள்ள பாடல். கொள்கைகளைக் கோடுகளாக்கி, அவற்றைத் தாண்டாமல் இருப்பேன் என்று மனதுக்குள் சபதமேற்று, அவ்வாறே உறுதி காப்பவர்களே உலகில் உயர்ந்த இடங்களைத் தொடுகின்றனர். பிறவியின் பயனை முழுதாக அனுபவிக்கின்றனர். இன்றைய சூழலில், பள்ளி, கல்லூரிகளில் படிப்பவர்களில் பெரும்பாலானோரின் விருப்பமாக இருப்பது, ஐ.ஏ.எஸ். படித்துத் தேறி, கலெக்டராக மாற வேண்டுமென்பதுதான்… நாட்டைத் திருத்தவும், நலிவுற்றவர்களுக்கு உதவவும் வழியேற்படுத்திக் கொடுப்பது அப்பதவி என்ற காரணத்தால். ஆனாலும் தேறி வந்தவர்களில் பெரும் சதவீதத்தினர் அரசியல்வாதிகளின் கைப்பாவைகளாக மாறிப்போவதுதான் வேதனை தரும் சோதனை! ‘ஒரு கோடு போடணும். அதை அழிக்காமலேயே சின்னக் கோடு ஆக்கணும்!’ என்று குழந்தைகள், பத்திரிகை விடுகதைக்கு விடை தேட, அம்மாவோ முதலில் வீட்டு ஆண்பிள்ளைகளிடம் கேட்கச் சொல்ல, பையன் அப்பாவிடம் விடுகதையைச் சொல்ல, அப்பா மெல்லத் தாத்தாவைக் கைகாட்டி விட்டுத் தப்பிக்க, தாத்தாவோ, ’வயசான காலத்ல என்னைச் சிரமப்படுத்தாதீர்கள்!’ என்று கழன்று கொள்ள, இறுதியில் அம்மாவே கைவேலையைச் செய்தபடியே கடுகளவும் தாமதிக்காமல் ’பக்கத்தில் ஒரு பெரிய கோட்டைப் போடு!’ என்று அனாயாசமாகச் சொல்லி, சிலேட்டில் கோடு போடும் ஜெயந்தியின் ஆரம்பமே நம்மை நிமிர்ந்து உட்காரச் செய்து விடும். அதனால்தானே ’இரு கோடுகள்’ 1970-ம் ஆண்டில் தேசிய விருது பெற்றது. சௌகார் ஜானகிக்குத் தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுத்தந்தது.
எல்லோரும், செய்த பாவங்களைப் போக்கக் காசி சென்று கங்கையில் மூழ்கி எழுவர். காசியிலேயே காதலித்துக் கல்யாணம் செய்து கொண்ட இருவர் பிரிந்து போவதாகக் கதையமைத்ததன் மூலம், பாலச் சந்தர் மாறுபட்ட சிந்தனை கொண்டவர் என்பதை உணரலாம். ஜெமினியும், ஜானகியும் திருமணம் செய்து கொண்டதை, ஜெமினியின் தாய் ஏற்காததால், பிரிய நேரிடுகிறது. கருவுற்ற ஜானகியை எவரும் கைப்பிடிக்க வர மாட்டார்கள் என்ற எண்ணத்தில், ஜானகியின் தந்தை அவரை மேற்கொண்டு படிக்க வைக்க, தென்னகம் திரும்பும் ஜெமினி ஜெயந்தியை மணந்து, மூன்று குழந்தைகளுக்கும் தந்தையாகிறார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஹெட் கிளர்க்’பணியில், சந்தோஷமாகக் குடும்பம் நடத்தும் அவருக்கு, கலெக்டர் உருவில் சோதனை வருகிறது. ஜானகியே ஆட்சியராக வந்து அமர, திணறிப்போகிறார் அவர். அலுவலகத்தில் பணியாற்றும் நாகேஷ் கலெக்டரையும், ஹெட் கிளர்க்கையும் இணைத்துக் கதை கட்ட, ஜெயந்தியின் காதுகளுக்கும் அது எட்ட, சக்களத்திச் சண்டைக்குக் கேட்கவா வேண்டும்?
ஜானகியின் மகன் ராமுவும், ஜெயந்தியின் மகன் பிரபாகரும் நண்பர்களாகப் பழக, இறுதியில் இருவரும் நீரில் மூழ்கி அபாய நிலைக்குத் தள்ளப்பட, சிகிச்சையில் பிரபாகர் பிழைத்துக்கொள்ள, கலெக்டர் ஜானகியின் மகன் ராமு இறந்து விடுகிறான். வெளி நாட்டில் பணிபுரியச் செல்லும் ஜானகிக்குத் தன் மகன் பிரபாகரையே பரிசாக்கி, அவளுடன் அனுப்பி வைக்கிறாள் ஜெயந்தி. இனிதே முடிகிறது படம்-சூப்பர் ஹிட்டாக! கே. பி. , ஒரு தந்திரக்காரர்!ஜோசப் ஆனந்தனின் மூலக்கதையில் உருவான ‘இரு கோடுகள்’நாடகத்தை, அதே பெயரில் திரைக்குக் கொண்டு வந்து, தன் பாணியில் கதை சொல்லி நம்மைக் கட்டிப் போட்டு விட்டார். அப்பப்பா!என்ன மாதிரியான உருவக வசனங்கள். காசி மாநகரில் நல்ல காபி கிடைக்காமல் அல்லாடும் கதாநாயகனுக்கு, ‘அச்சா’ ஜானகி, காபி கொடுத்து உபசரிக்க, அது காதலில் முடிய, தமிழ் ஆசானான வி. எஸ். ராகவன், தன் உறுதி மொழிக்கு மாறாக அவர்கள் திருமணத்தை ஏற்க மறுக்க, தமிழ் ஆசானைத் தமிழ் வழி சென்று மடக்கும் ஜானகியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
‘புகழோ இகழோ பொருட்படுத்தாது
இன்பமோ துன்பமோ இணைபிரியாது
ஊனையும் உணர்வையும் உயிரையும் தாண்டி
அப்பால் தொடரும் அன்பே காதல்!
என்ன அழகான விளக்கம் காதலுக்கு. தற்காலக் காதலர்கள் இதனை மனதில் இறுத்த வேண்டும். ’ஆ ஊ’ என்ற உடனேயே ‘டிவர்ஸ்’ கேட்டு நீதி மன்றங்களை அணுகுவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். குறையில்லாதிருந்தால் அவர்கள் மனிதர்கள் அல்ல… மகேசன்!
‘மண்படைப்பே காதலெனில்
காதலுக்கு மறுப்பெதற்கு?
கட்டுப்பாடு எதற்கு?’
மகள் பாட்டால் இடிஇடிக்க, தந்தை பாச மழை பொழிந்து, வாழ்த்தி ஏற்றுக்கொண்டு விடுவார்.
லைப்(Life), ஃபைல்(File) இரண்டையும் இணைத்து கலெக்டர் ஜானகியும், ஹெட்கிளர்க் கோபிநாத்தும்(ஜெமினி)பேசுவதை மறந்திடவும் முடியுமோ? நான் லைஃப் பற்றித்தான் பேசுகிறேன் என்று மாவட்ட ஆட்சியரும், நான் ஃபைல் பற்றிப் பேசுகிறேன் என்று குமாஸ்தாவும் மாறி மாறிப் பேசுவதை, இது வரை பார்த்து அனுபவிக்காதவர்கள் ஒரு முறை பார்த்து விடுவதே நல்லது. ஏற்கெனவே படத்தைப் பார்த்து ரசித்தவர்களும் மீண்டும் ஒரு முறை பார்த்து, நிறைவு பெறலாம். டவாலியும், வேறு எவரும் இல்லாத நேரத்தில் கலெக்டராக இருந்தாலும், கணவன் நிற்கும்போது தான் உட்கார்ந்து பேசக்கூடாது என்று எண்ணி நின்று பேசுவதும், யாராவது அறைக்குள் வந்தால் உட்கார்ந்து பேசுவதுமாக நம்மை சீட்டின் ஓரத்திற்கு வர வைத்து விடுவார் இயக்குனர். அதனால்தான் சொன்னேன் கே.பி தந்திரக்காரர் என்று! ஏனெனில், அது போன்ற வசனங்களும், பண்பாட்டை ஒட்டிய காட்சி அமைப்புகளும், பல ஆண்டுகளுக்கு ஒரு முறையே திரைப்படங்களில் இடம் பெறுகின்றன. மற்றொரு நிகழ்வில், ஜெமினி சைக்கிளில், அலுவலகத்திலிருந்து வீடு திரும்புகையில் வீலில் காற்று இறங்கி விட, சாலையின் ஓரமாக அமர்ந்து கை பம்பினால் காற்று அடிப்பார். காரில் வரும் ஜானகி அருகில் வந்ததும், காரை நிறுத்தச் சொல்லி, அவரைக்காரில் வருமாறு அழைப்பார். ஜெமினி மறுத்து விட, ’வாழ்க்கையில்தான் அவரை ஓவர்டேக் செய்ய வேண்டியதாயிற்று! வழியிலும் ஓவர்டேக் செய்ய வேண்டாம்!’என்று காரை வேறு வழியில் திருப்பச் சொல்லிச் செல்வது, தந்திரக்காரரின் முத்திரை.
இந்த ஏப்ரல் மாதத்தின் ஒன்றாம் நாளை உலகம் முழுவதும்’முட்டாள்கள் தின’மாகக் கொண்டாடுகிறோம். ’ஏப்ரல் ஃபூல்’ என்பதனை A. F. என்று சுருக்கமாக ரப்பரில் செதுக்கி, இங்க்கில் தோய்த்து, நண்பர்கள் பார்க்காத சமயத்தில் அவர்கள் சட்டையின் முதுகுப் பக்கத்தில் குத்தி விடுவது, நீண்ட காலப் பழக்கம். அன்றும் கலெக்டர் மகனுடன் விளையாடச் சென்ற பிரபாகரின் சட்டையில் A. F. ஐப் பார்த்த ஜெயந்தி, அதைத் தன் கணவரின் சட்டையிலும் பார்த்து விட, ஒரே களேபரந்தான். சந்தேகத்தில் கிடந்து உழலும் ஜெயந்திக்குத் துருப்புச் சீட்டு கிடைத்தது போலாகி விடும்.
சின்னச் சின்ன நிகழ்வுகள்தாம். ஆனால் உணர்த்தும் கருத்து உயர்வானவை; நம்மை வெகுவாகக் கவர்பவை; மனதின் ஆழத்தில் நிரந்தர இடம் பிடிப்பவை. வாலியின் பாடல்கள் சிலவே என்றாலும், உணர்த்தும் கருத்துகள் ஏராளம். ’புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் இருவருக்காக…இந்த பாமா ருக்மணி இருவருமே அவன் ஒருவனுக்காக!’ என்பதன் மூலம் ஜெமினியை இருவரும் சொந்தம் கொண்டாடுவதை விளங்கிக் கொள்ளலாம். ’பாப்பா பாட்டு பாடிய பாரதி நான்தானே’ மூலம் நாட்டு நடப்பைக் கோடிட்டுக் காட்டுவார் நாகேஷ். சிலையிலிருந்து இறங்கி வந்து பாடி விட்டு மீண்டும் சிலையாவது புதுமை. அதனைக் கண்ட கலெக்டர், ’சிலை உயிர் பெற்று வந்ததைப் பார்த்தோம். இங்கு வந்ததும் நான் சிலையாகி விட்டேன், ’ என்று கூறுவது பொருள் பொதிந்த வசனம். ’நான் ஒரு குமாஸ்தா… நான் பாடுவேன் தமாஷா’ என்று பாடும் நாகேஷ், குழந்தை கூடவே அலுவலகம் வருவதும், குழந்தை கலெக்டர் அறையிலிருந்து புகைப்படம் எடுத்து வருவதும் வேடிக்கை. சின்னச் சின்ன பாத்திரங்களுக்கும் ஒரு முக்கியத்துவத்தைக் கொடுத்துவிட வேண்டுமென்பதை இயக்குனர் எண்ணிச் செயல்பட்டுள்ளார் என்பது வெளிப்படை.
குமாஸ்தா நாகேஷ், பேரூந்தில் வரும்போதே கலெக்டராகக் கனவு காண்பது நல்ல கற்பனை. அதோடு, கே. பி-க்கு, நாகேஷுக்கு நல்ல பாத்திரங்கள் கொடுத்து அவரைச் சோபிக்கச் செய்வதில், எப்பொழுதுமே அலாதிப் பிரியம் இருந்திருக்கிறது. மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் நடந்த பெண்களுக்கான ’மியூசிகல் சேர்’ போட்டியில், ஜானகி, ஜெயா இருவருமே முதலிடத்தைப் பகிர்ந்து கொள்வர். கணவனையும் பகிர்ந்து கொள்ளலாம் என்பதன் அடையாளமாக அது நிற்கும். கலெக்டர், முதல் அமைச்சரைச் சந்திக்கும் காட்சியில், அண்ணாதுரை அவர்களுடன் பேசுவது போலக் காட்டுவது நல்ல யுக்தி. சில படங்கள், ’நல்ல படங்கள்’லிஸ்டில் வந்தாலும், வசூலில் ஏமாற்றி விடுவதுண்டு. ஆனால் இந்தப்படம் விருதுகளையும் பெற்றுக் கொடுத்தது; வசூலிலும் வெளுத்து வாங்கியது.
இதன் வெற்றியைத் தொடர்ந்து, தெலுங்கு(கலெக்டர் ஜானகி), கன்னடம்(எராடு ரெக்கேகளு), இந்தி(சஞ்சோக்) ஆகிய மொழிகளுக்கும் இரு கோடுகள் பயணம் செய்தது. தெலுங்கில் இதனை எடுத்தபோது, கதைக் குழு சிறு மாற்றங்கள் செய்ய விரும்பியபோது, இயக்குனர் ஒரு மாற்றம் செய்தாராம். காரை ஓட்டி வரும் கலெக்டர் ஜானகி, சைக்கிளுக்குக் காற்றடிக்கும் முன்னாள் கணவனைக் கண்டதும், அவளையும் அறியாமல் கண்களில் நீர் திரள, வெளியே மழை பெய்வதாக எண்ணி, காரின் வைப்பரைப் போடுவாராம். காரில் இருக்கும் டிரைவரோ, ’எதுக்கும்மா தேவையில்லாம வைப்பரைப் போடுறீங்க? வெளியே மழை ஏதும் இல்லையே!’ என்று கூறப் பின்னர் சுதாரித்துக் கொள்வாராம். என்னே பாலச்சந்தரின் கற்பனை வளம்!
மனத்தில் நிற்கும் வசனங்கள் சில…
-உன் கையை மூளியாக்கிக்கிட்டு எனக்கு எதுக்கும்மா புது ட்ரஸ்?(ஜெமினி, ஜெயந்தியிடம்)
-நல்லா வேலை பார்க்கிறவனுக்கு வேலை. வேலையே பார்க்காதவனுக்கு ப்ரமோஷன்! ஐ ஆம் த கலெக்டர் (நாகேஷ்)
-18 செக்ஷன். 250 பேர்ல 90(36%)பேர் பெண்கள். (52 ஆண்டுகளுக்கு முன்பாகவே பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்குக்கு மேல் பணி)(அதிகாரி)
-தப்பா எழுதிட்டா அழுத்தித் திருத்தி எழுதறதுக்கு வாழ்க்கை கரும்பலகை இல்ல! (வி. எஸ். ராகவன்)
-அம்மா எனக்குப் பசிக்குதும்மா’என்கின்ற மகன் பிரபாகனிடம், ”நீ கலெக்டர் வீட்டுக்குப் போயிப் பார்த்துட்டு அங்க உன்அப்பா இல்லேங்கற நியூசோட வா! ஒனக்கு விருந்தே வைக்கிறேன்!” (ஜெயந்தி)
-ஒரு பொருளை உங்ககிட்டா ஒப்படைச்சா கடைசி வரைக்கும் அதைக் காப்பாற்ற வேண்டிய கடமை உங்களோடது இல்லையா?(ஜானகி)
இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். சிகரத்தின் மீது ஏற நாம்தான் முயற்சியுடன் செயல்பட வேண்டும். பாலச் சந்தர் இயக்குநர் சிகரமல்லவா?
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.