* வேல ராமமூர்த்தி எழுதிய ‘குற்றப்பரம்பரை’ நாவலை யார் திரைப்படமாக்குவது என்பதில் ரொம்ப நாள்களாக வார்த்தைப் போர் நடந்து வந்தது. அதில் இயக்குநர்கள் பாலாவுக்கும், பாரதிராஜாவிற்கும் நடந்த வாக்குவாதம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. இப்போது அந்த நாவலைப் படமாக்க ஹாட் ஸ்டார் ரெடியாக இருக்கிறது. அதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த இயக்குநர் பாண்டிராஜ். ஆனால், அவரோ கையில் இருக்கிற ஸ்கிரிப்ட்டைக் காரணம் காட்டி மறுத்துவிட, மறுபடியும் அது இயக்குநர் முத்தையா வசம் போனது. பிறகு அதில் சாதி சாயம் விழுந்துவிடுமோ என்ற பயத்தில் இப்போது பிரச்னை இல்லாமல் இயக்குநர் நடிகர் சசிகுமார் கைக்குச் சென்றிருக்கிறது. ‘ஈசன்’ படத்துக்குப் பிறகு சசிகுமார் மீண்டும் டைரக்ஷனில் இறங்குகிறார். இப்போது கைவசம் உள்ள ஸ்கிரிப்டை மெருகேற்றிக் கொண்டிருக்கிறார்.
* ‘விஜய் 66’ படத்தில் வசனம் எழுதப் போகிறவர்கள் இவர்கள்தான் என இரண்டு பேரை சொல்லிக் கொண்டிருந்தார்கள். காரணம், படத்தின் இயக்குநர் இதற்கு முன்பு இயக்கிய படத்திற்கு இந்த இரட்டையர்கள்தான் வசனம் எழுதினார்கள். படமும் ஹிட். அந்த கூட்டணி, இதிலும் இணையும் என எதிர்பார்த்தனர். ஆனால், அவர்கள் இப்போது ஏன் வசனம் எழுதவில்லை என விசாரித்தால்… மொத்த யூனிட்டும் ஹீரோவைக் கைகாட்டுகிறது. ‘வசனம் எழுதும் இருவரில் ஒருவர் படம் இயக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு அவர் ஒர்க் பண்ணிக் கொண்டிருக்கும் போதே அவர் படம் இயக்கவும் போவார். இது சிக்கல் ஏற்படுத்திவிடும்’ என்று ஹீரோ தரப்பு சொன்னதால் ரைட்டர்களை மாற்றியதாகச் சொல்கிறர்கள்.
* இளையராஜாவின் சகோதரர் குடும்பம் எல்லாம் ஒன்று சேர்ந்ததின் காரணமாக ஒரு பெரிய கெட்டுகெதர் நடத்தத் தீர்மானமாகியிருக்கிறது. பெரியவர், அதற்கு கண்ஜாடை காட்டிவிட்டதால் பொறுப்பை ஏற்றுக்கொண்டு வெங்கட்பிரபு காரியமாற்றி வருகிறார். நிகழ்வுக்கு மொத்த ஃபேமிலிக்கும் வேண்டிய முக்கியமான விருந்தினர்களை ஸ்பெஷலாக அழைக்கத் தீர்மானித்து விட்டார்கள். அரசியல் சினிமா வட்டாரங்களில் இருந்து ரொம்பவும் தேர்வு செய்த பிரபலங்களுடன் இந்தச் சந்திப்பு இருக்கும் என பேசிக்கொள்கிறார்கள். அந்த நெருங்கிய நண்பர்களின் மீட்டிங்கை தன் வீட்டிலேயே நடத்த விரும்பி இருக்கிறார் இளையராஜா. அநேகமாக இந்த மாதக் கடைசியில் இந்தச் சந்திப்பு நடக்கலாம்.
* விவகாரத்துக்குப் பிறகு தனுஷிடம் பதினைந்து நாள்களும், ஐஸ்வர்யாவிடம் மீதி நாள்களும் குழந்தைகள் இருந்து வருகிறார்கள். அவர்களின் பொருட்டே தனுஷும், ஐஸ்வர்யாவும் தங்கள் பிரிவைப் பற்றி எங்கேயும் பேசவில்லை என்கிறார்கள். இன்னமும் அவர்கள் மீண்டும் சேர்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் சொல்கிறார்கள். அத்தகைய முயற்சி ரஜினி பக்கமிருந்து வருவதைதான் இரண்டு குடும்பங்களும் விரும்புகின்றன. இதற்கு நடுவில் மகன்கள் இரண்டு பேரையும் கோடை விடுமுறைக்கு லண்டன் கூட்டிச்செல்ல புக் செய்துவிட்டார் தனுஷ். இதற்கு முன்னால் கூட பிரிவு சரிசெய்யப்படலாம்.
* ஸ்ருதியும், அக்ஷராவும் மும்பையில் தனித்தனியாக வசிக்கிறார்கள். தாய் சரிகா தனி அப்பார்ட்மென்டில் இருக்கிறார். கமல் மட்டும் தனியாக இருக்கிறார். இந்நிலையில் ஸ்ருதியும், அக்ஷராவும் அப்பாவிற்கு துணையாக சென்னைக்குத் திரும்பப் போவதாகச் சொல்கிறார்கள். அதற்கான விரிவாக்கம் கமலின் ஈசிஆர் வீட்டில் நடந்து வருகிறதாம். கமல் அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் மறுபடியும் இந்த ஒன்றுகூடல் சாத்தியம் என்கிறார்கள்.
* சமீபத்தில் நடிகர் பிரசாந்த் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, ஏ.வெங்கடேஷ், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்பட சிலர் கலந்து கொண்டு பிரசாந்தை வாழ்த்தினார்கள். அதில் ஏ.வெங்கடேஷ் பேசியதுதான் ஹைலைட். “நான் பிரசாந்த் சாருடன் ‘சாக்லெட்’ என்ற ஒரு படத்தில் மட்டும்தான் பணி புரிந்தேன். ஆனால் பல படங்களில் பணிபுரிந்த அளவிற்கு எங்களிடம் நல்ல பழக்கமும் நல்ல புரிதலும் தொடர் நட்பும் உள்ளது. அன்று முதல் அவருடன் நான் தொடர்ந்து பயணம் செய்கிறேன். திரையுலகில் ஒரு பேச்சு உள்ளது. பிரசாந்தைக் கெடுப்பதே அவரது அப்பாதான் என்று. இதை என்னிடம் பலர் நேரில் நேரிலேயே கூறியிருக்கிறார்கள். இது பற்றி நானும் பிரசாந்த் சாரும் பேசிக் கொண்டிருந்த போது தியாகராஜன் சார் மௌனமான ஒரு சிரிப்பு சிரித்தார். அப்போது பிரசாந்த் கூறியதுதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘எந்தத் தந்தையாவது தன் மகன் வாழ்க்கையைக் கெடுக்க விரும்புவாரா? அவரின் வளர்ச்சிக்கு இடையூறு செய்வாரா? எனக்கு என் அப்பாதான் எல்லாம்’ என்றார். அந்த நொடியே அவர் மீது எனக்கு இருந்த மதிப்பு மேலும் அதிகரித்தது” என்றார் ஏ.வெங்கடேஷ். இதையும் மௌனமாக ரசித்துக் கொண்டிருந்தார் தியாகராஜன்.
* ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களை அடுத்து எச்.வினோத் அஜித்தை வைத்து இயக்கும் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் வருகிற 11-ம் தேதி துவங்குகிறது. இம்மாதம் 9-ம் தேதியன்றே படப்பிடிப்பு துவங்கியிருக்க வேண்டும். ஆனால், அரங்கம் அமைக்கும் பணிகளின் தாமதத்தினால் 11-ம் தேதிக்கு மாறியது. அஜித்துடன் தபு உள்பட புதுமுகங்கள் பலர் நடிக்கின்றனர். படப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் பறந்திருக்கிறார் அஜித். ‘வலிமை’ படப்பிடிப்பில் ஏற்பட்ட தசைப்பிடிப்புகளால், கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்ட அஜித்திடம் சாலை பயணம், பைக் பயணங்களைத் தவிர்க்குமாறு ஆலோசனை சொன்னதாலேயே அவர் விமானத்தில் சென்றிருக்கிறார் என்கிறார்கள்.
* ஒரு பக்கம் ஹீரோயின், இன்னொரு பக்கம் பாடகி என மாறி மாறி அவதாரமெடுக்கும் நாயகி, தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் முழுக்கவனம் செலுத்துகிறார். அப்படி அவர் நடித்த மூன்று படங்களும் முடிந்து, ரிலீஸுக்கும் ரெடியாகிவிட்டன. மீண்டும் இப்படியான கதைகளைத்தான் விரும்பிக் கேட்கிறாராம். இதில் ஹைலைட்டாக, இயக்குநர்கள் கதை சொல்லப் போனால், ‘முதலில் பேமென்ட்டைச் சொல்கிறேன்’ என ஒரு பெரிய தொகையை சம்பளமாகக் கேட்கிறார். இந்த கண்டிஷன் ஓகே ஆன பிறகே, கதை கேட்க ரெடியாகிறாராம்.