சசிகலா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீது சென்னை உரிமையியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற நிலையில், 2017 ஆம் ஆண்டு நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா, தினகரன் இருவரும் பொதுச் செயலாளர் மற்றும் துணை பொதுச் செயலாளர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதாக ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் அறிவித்தனர்.
பொதுச் செயலாளர் இல்லாமல் நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரியும், பதவியில் இருந்து நீக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யக் கோரியும் சசிகலா தரப்பில் சென்னை மாவட்ட உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி அதிமுக நிர்வாகிகள் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை முடிவடைந்த நிலையில், சென்னை உரிமையியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM