மும்பை மாநகராட்சியில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நிலைக்குழு தலைவராக இருந்தவர் யஷ்வந்த் ஜாதவ். சிவசேனாவைச் சேர்ந்த ஜாதவ் தான் பதவியில் இருந்த போது மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுடன் சேர்ந்து கொண்டு பணிக்கான தொகையை அதிகரித்து காட்டியும், செலவு கணக்கை அதிகரித்து காட்டியும் மோசடி செய்து இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த மாதம் ஜாதவ் வீட்டில் 3 நாள்கள் சோதனை நடத்தினர். அதோடு ஜாதவுக்கு நெருக்கமான மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.
ஜாதவ் பினாமி பெயரில் ஏராளமான வீடுகளை வாங்கி இருப்பதாகவும் வருமான வரி சோதனையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஜாதவ், தென் மும்பை பைகுலாவில் ஒரே கட்டடத்தில் வாங்கிய 31 வீடுகளை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது தவிர பாந்த்ராவில் உள்ள ரூ.5 கோடி மதிப்புள்ள ஒரு வீட்டையும் வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ரூ.5 கோடி மதிப்புள்ள வீட்டுக்கு ஜாதவ் இது வரை ஒரு கோடி மட்டுமே கொடுத்துள்ளார். ஒரே நாளில் ஜாதவ் மற்றும் அவரின் குடும்பத்துக்குச் சொந்தமான 41 சொத்துக்களை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
வருமான வரிச்சட்டம் 132(9)பி.யின் கீழ் இந்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சொத்துக்கள் அனைத்தும் ஜாதவ் மாநகராட்சி நிலைக்குழு தலைவராக இருந்த போது சம்பாதித்த பணத்தில் இருந்து வாங்கியதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஜாதவின் அத்தையின் பெயரில் இருக்கும் ஒரு ஹோட்டலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஓட்டலை ஜாதவ் வெறும் ரூ.1.75 கோடிக்கு வாங்கி ஒரே ஆண்டில் அதனை 20 கோடிக்கு விற்பனை செய்து இருப்பதையும் வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். சொத்துக்கள் அனைத்தும் பிமல் அகர்வால் என்ற மாநகராட்சி ஒப்பந்ததாரருக்கு சொந்தமான நியூஷக் மல்டிமீடியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் மூலம் ஜாதவால் வாங்கப்பட்டுள்ளது.
இது தவிர பிரதான் டீலர்ஸ் என்ற நிறுவனம், ஜாதவ் சட்டவிரோதமாக சம்பாதித்த ரூ.15 கோடியை சட்டப்பூர்வ பணமாக மாற்ற உதவி செய்துள்ளது. ஜாதவிடமிருந்து ரூ.15 கோடியை வாங்கிக்கொண்டு அத்தொகைக்கு நிகராக உத்தரவாதம் இல்லாமல் பிரதான் டீலர்ஸ் நிறுவனம் ஜாதவுக்கு கடனாக 15 கோடியை கொடுத்திருக்கிறது. கடந்த ஆண்டு வருமான வரித்துறையினர் ஜாதவுக்கு எதிராக விசாரணையை தொடங்கியவுடன் ரூ.15 கோடி கடனையும் திரும்ப செலுத்திவிட்டதாக ஜாதவ் தெரிவித்தார். பிரதான் டீலர்ஸ் நிறுவனம் வேறு எந்த விதமான தொழிலையும் செய்யவில்லை. இக்கம்பெனியை ஜாதவும், அவரது மனைவியும் எம்.எல்.ஏ.வுமான யாமினியும் சேர்ந்து பினாமி இயக்குநர்களை போட்டு நடத்தி வந்துள்ளனர் என்றும், மொத்தம் 5 கம்பெனிகளை தொடங்கி அதனை சட்டவிரோத பண பரிவர்த்தனைக்கு மட்டும் பயன்படுத்தி இருப்பதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜாதவின் வருமான கணக்கை கவனித்துக்கொண்டு இருக்கும் மைத்துனர் விலாஸ் மொஹிதே மற்றும் உறவினர் வினித் ஜாதவ் ஆகியோரை நேரில் ஆஜராக வருமான வரித்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது. அதோடு ஜாதவ் பதவியில் இருந்த போது மும்பை மாநகராட்சியில் கொடுக்கப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்த விபரங்களை தாக்கல் செய்யும்படியும் வருமான வரித்துறை மும்பை மாநகராட்சியிடம் கேட்டுள்ளது.
வருமான வரித்துறையினர் ஜாதவிடம் பறிமுதல் செய்த சொத்துக்கள் தொடர்பாக வருமான வரித்துறையிடம் முறைப்படி விளக்கம் கொடுத்து பறிமுதல் செய்த விடுகள், சொத்துக்களை திரும்ப பெறலாம். அல்லது இந்த சொத்துக்களை வாங்க ஜாதவ் செலவு செய்த தொகைக்கு வருமான வரி மற்றும் அபராதம் விதிக்கப்படும். அதனை ஜாதவ் செலுத்தவில்லையெனில் பறிமுதல் செய்த வீடுகள் அனைத்தும் ஏலத்தில் விடப்பட்டு வருமான வரி மற்றும் அபராதம் எடுத்துக்கொள்ளப்படும். ஜாதவ் இது குறித்து 6 மாதத்திற்குள் முடிவு செய்யவேண்டும் என்கிறார்கள்.