180, வெப்பம், ஓகே கண்மணி, 24, மெர்சல் என தமிழில் அவர் நடித்த படங்கள் குறைவு எனினும் தமிழ் ரசிகர்களுக்கு எப்போதும் பேவரைட் நித்யா மேனன்.
நித்யா மேனனின் தாய்மொழி மலையாளம். ஆனால் அவரது பெற்றோர்கள் கர்நாடகாவில் செட்டில் ஆனதால், நித்யா படித்தது எல்லாம் கன்னடம் தான்.
மலையாளம் பேச மட்டுமே தெரியும். எந்த மொழியில் நடித்தாலும் சொந்த குரலில் டப் செய்வதையே வழக்கமாக கொண்டிருக்கிறார் நித்யா.
மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு என தென்னிந்தியப் படங்களில் 10 வருடங்களாக நடித்து வரும் நித்யா மேனனுக்கு ஆரம்பத்தில் நடிப்பதில் விருப்பமே இல்லை.
பத்திரிக்கையாளர் ஆக வேண்டும் என்பதுதான் அவரது கனவு. பின், தன்னுடைய பார்வையை திரைப்படங்கள் பக்கம் திருப்பினார்.
புனே பிலிம் அன்ட் டெலிவிஸன் கல்வி நிலையத்தில் திரைப்படவியல் படித்தார்.
நித்யா மேனன் ஆங்கில படம் ஒன்றிலும், இந்தி படம் ஒன்றிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.
ஆரம்பத்தில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்தவர் 2008 மோகன்லால் உடன் மலையாளத்தில் ஆகாச கோபுரம் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
படம் தேர்ந்தெடுப்பதில் நித்யாவுக்கு என ஒரு ஸ்டைல் உண்டு. வெறுமனே இரண்டு பாடலுக்கு வந்து போகும் கதாநாயகி பாத்திரங்களில் அவர் நடிப்பதே இல்லை.
“நான் உனக்கு கண்மணியா” என துல்கரிடம் ஆர்வம் மேலிடும் கண்களோடு நித்யா கேட்பது இன்றைக்கு வரைக்கும் இளைஞர்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக இருக்கிறது.
அலட்டல் இல்லாத உடல்மொழி, நினைவில் ஒட்டிக்கொள்ளும் முகம், ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பு… என தனித்துவமாக இருப்பவருக்கு இன்று பிறந்தநாள். வாழ்த்துகள் நித்யா மேனன்!