வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மக்களுக்கு பொது வினியோக திட்டம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு திட்டங்களின் வாயிலாக செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.பிரதமர் மோடி, கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று பேசுகையில், ‘நாட்டில் ஊட்டச்சத்து குறைப்பாடால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என அறிவித்தார்.
இந்நிலையில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் நேற்று கூறியதாவது:பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் ௭ம் தேதி நடந்தது. இதில், மக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்திய உணவு கழகம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அமைப்புகள், செறிவூட்டப்பட்ட அரிசியை கொள்முதல் செய்துள்ளன. எனவே, உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், பொது வினியோக திட்டம், உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு திட்டங்கள் வாயிலாக, மக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியை, ௨௦௨௪ம் ஆண்டுக்குள் மூன்று கட்டமாக வினியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு 4270 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த செலவு முழுவதையும் மத்திய அரசே ஏற்கிறது. ஏற்கனவே சோதனை அடிப்படையில், தமிழகம் உட்பட ௧௧ மாநிலங்களில் குறிப்பிட்ட ஒரு மாவட்டத்தில் மட்டும், பொது வினியோக திட்டம் வாயிலாக செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம், கடந்த ௨௦௧௯ல் துவக்கப்பட்டது. இவ்வாறு அனுராக் தாக்குர் கூறினார். 9 சக்திகள் அடக்கம்நாடு முழுதும், பலர் ஊட்டச்சத்து குறைபாடுடன் உள்ளனர்.
இவர்கள் ரத்தசோகை, நோய் எதிர்ப்பு சக்தி போன்றவற்றால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க, செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிக்கப்படுகிறது. இதற்காக, அரிசி மாவில், இரும்பு சத்து, போலிக் அமிலம், ‘வைட்டமின் – பி௧2’ உள்ளிட்ட ஒன்பது ஊட்டச் சத்துக்கள் சேர்க்கப்பட்டு, இயந்திரங்கள் உதவியுடன் அரிசி வடிவில், செறிவூட்டப்பட்ட அரிசியாக மாற்றப்படும். பின், 100 அரிசிக்கு, ஒரு செறிவூட்டப்பட்ட அரிசி என்ற வீதத்தில் சேர்க்கப்படும்.
– நமது சிறப்பு நிருபர் –
Advertisement