புதுடெல்லி: காவல் நிலையத்தில் பத்திரிகையாளர் அரைநிர்வாணமாக நிற்க வைத்து உள்ளாடையை கழற்றுமாறு கட்டாயப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்தியப்பிரதேச மாநில அரசை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த சர்ச்சைக்குரிய சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தின் சித்தி மாவட்டத்தில் ஏப்ரல் 2ம் தேதி நடந்துள்ளது. ஆனால் சமூக ஊடகங்களில் அரை நிர்வாண பத்திரிக்கையாளர்களின் புகைப்படங்கள் வியாழக்கிழமை வெளியானதைத் தொடர்ந்து அந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பாஜக எம்எல்ஏ கேதார்நாத் சுக்லா மற்றும் அவரது மகன் குருதத் குறித்து ஆபாசமான கருத்துக்களைக் கூறியதாத நாடக கலைஞர் நீரஜ் குந்தர் கைது செய்யப்பட்டது குறித்து விசாரிப்பதற்காக பத்திரிக்கையாளர் சென்ற போது அவரும் உடன் சென்றவர்களும் கைது செய்யப்பட்டு அரைநிர்வாணமாக்கப்பட்டனர். இது தொடர்பான படம் நேற்று வெளியாகி சர்ச்சையானது.
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்தியப்பிரதேச அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்கள் லாக்கப்பில் துன்புறுத்தப்பட்டுள்ளன. இதுதான் புதிய இந்தியா போல் தெரிகிறது. ஒன்று அரசாங்கத்தின் மடியில் அமர்ந்து அவர்களைப் புகழ்ந்து பாடலாம் அல்லது சிறைக்குச் செல்லலாம். புதிய இந்தியா அரசாங்கம் உண்மையைக் கண்டு அஞ்சுகிறது” என்று தெரிவித்துள்ளார்.