சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வில் கடந்த 12 ஆண்டுகளாக தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்கக்கூட தகுதியற்றவர்கள் என்பதால் அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊதிய உயர்வு தொடர்பான அவர்களின் கோரிக்கையையும் நிராகரித்துள்ளது.
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை கடந்த 2009-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி, பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என கடந்த 2011-ல் தமிழக அரசு உத்தரவிட்டது. 2011-ம் ஆண்டுக்கு முன்பாக ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனக்கூறி அவர்களின் வருடாந்திர ஊதிய உயர்வு மற்றும் ஊக்கத்தொகையை நிறுத்திவைத்து தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. 2011-ம் ஆண்டுக்கு முன்பாக பணி நியமனம் பெற்ற தங்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உத்தரவு பொருந்தாது என மனுவில் அவர்கள் கோரியிருந்தனர்.
இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பாக நடந்து வந்தது. மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் விமல் பி.கிரிம்சன், ஆர்.காமராஜ், ஜி.சங்கரன் ஆகியோரும், தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.சிலம்பணனும், மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.சங்கரநாராயணனும் ஆஜராகி வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டி.கிருஷ்ணகுமார் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டாலும், தமிழகத்தில் 2010 ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தின் பிரிவு 23(1)-ன்படி தேசிய தொழில்நுட்ப கல்விக் குழுமம், 2010 ஆகஸ்ட் 23-ல் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் ஆசிரியர்களின் கல்வித் தகுதி மற்றும் அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு இதுதொடர்பாக தேசிய தொழில்நுட்ப கல்விக் குழுமம் கடந்த 2011 செப்டம்பர் 27-ம் தேதி வெளியிட்ட திருத்த அறிவிப்பாணையில், தகுதித் தேர்வை சம்பந்தப்பட்ட மாநிலங்களே நடத்திக்கொள்ள வேண்டும் என தெரி விக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழக அரசும் இத்தேர்வை நடத்தும் பொறுப்பை ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைத்துள்ளது. இந்த சட்டம் அமலுக்கு வந்துவிட்ட பிறகு ஆசிரியர்களாக பதவியில் இருப்பவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற வேண்டும் என்பது குறைந்தபட்ச தகுதியாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
2011-ம் ஆண்டுக்கு முன்பாக ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் இந்த தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனக் கூறி அவர்களுக்கான ஊதிய உயர்வை அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளதை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பதால் மனுதாரர்களுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீதம் மற்றும் அதற்குமேல் மதிப்பெண் பெற்றவர்களை மட்டுமே தேர்ச்சி பெற்றவர்களாக கருத முடியும். 2011-ம் ஆண்டுக்கு முன்பாக பணியில் சேர்ந்தவர்களுக்கு முதலில் 5 ஆண்டுகள், அதன்பிறகு 4 ஆண்டுகள் என மொத்தம் 9 ஆண்டுகள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தேர்ச்சி பெற்றால் மட் டுமே அவர்களின் பணி நியமனம் அங்கீகரிக்கப்படும்.
ஆனால், கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டு, இதுதொடர்பாக 2011-ல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்பிறகும் மனுதாரர்கள் கடந்த 12 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியில் நீடித்து வருகின்றனர். எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வில் கடந்த 12 ஆண்டுகளாக தேர்ச்சி பெறாதவர்கள் பணியில் நீடிக்கவே தகுதியற்றவர்கள்.
மாணவர்களுக்கு தரமான கல்வியை போதிக்க ஆசிரியர்களும் அனைத்து வகையிலும் தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும். ஆசிரியர்களின் தரத்தை சோதிக்கவே ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் தகுதித் தேர்வை நடத்தும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு மாநில அரசு உத்தரவிட வேண்டும். வரும் ஜூன் மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தரப்பிலும் இதற்கான அவகாசத்தை மேலும் நீட்டிக்க முடியாது என கூறப் பட்டுள்ளது.
எனவே, மனுதாரர்களின் கோரிக் கையை ஏற்க இயலாது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் கடந்த 2019-ல் பிறப்பித்துள்ள உத்தரவை அதிகாரிகள் சட்டப்படி நிறைவேற்ற வேண்டும். அதேபோல, ஆண்டுதோறும் இந்த தகுதித் தேர்வை கண்டிப்பாக நடத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளார்.