தங்கவயல் செக்போஸ்ட்| Dinamalar

ஆபிசரே நேரடியாக அதிரடி சோதனை! திரவ பெட்ரோலிய எரிவாயு எனப்படும், எல்.பி.ஜி., காஸ் பாதுகாப்பு இல்லாமல் ஆட்டோ, கார்களுக்கு கடைகளில், வீடுகளில் சிலர் சட்ட விரோதமாக ‘ரீபில்லிங்’ செய்றாங்கன்னு பலருக்கும் தெரியாது.கள்ளச்சாராயம் காய்ச்சிய போது மாமூல் வசூல் வேட்டை நடத்தி வந்தவர்கள் போல, சிலர், காஸ் ரீபில்லிங் செய்கிறவர்கள் எங்கே; யார் செய்றாங்கன்னு தெரிந்து, அவர்களிடம் மாமூல் வசூலித்து வராங்க. ஏன்னா சட்டம் அவங்க கையில் என ஜனங்க நம்புறாங்க. இவங்க தைரியத்தில் தான் சட்டவிரோதமா இது நடக்குமாம்.குடியிருப்பு பகுதிகளில் ஆட்டோ வாகனங்களுக்கு காஸ் ரீபில்லிங் செய்யும் போது, அசம்பாவிதமாக தீப்பற்றிக் கொண்டால் பெரும் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தடுக்க பாதுகாப்பு எதுவுமே இல்லை.கள்ளச்சாராயம் ஒழிந்தது போல, காஸ் ரீபில்லிங் தொழில் ஒழியணும். மாமூல் வாங்குறவங்க தைரியத்தில் தான் இத்தொழில் பயமின்றி நடக்குதுன்னு தெரியுது. பெரிய காக்கி ஆபிசரே நேரடியாக அதிரடி சோதனை செய்தால் தான் சட்ட விரோத செயல்கள் அடங்குமுன்னு பலரும் கருதுறாங்க!பில்டிங் ரொம்ப வீக்!கோல்டு சிட்டியில் ஐ.சி.யு., வென்டிலேட்டர் வசதியில் மருத்துவமனை ஒண்ணு கூட இல்லை. கொரோனா நேரத்தில் இதன் பாதிப்புகளும் பலரது கல்லறைகளும் கண் முன் கதை சொல்லுது.இதய நோய் உள்ளவர்களுக்கு சிகிச்சைக்கு இப்பவும் மருத்துவமனை இல்லை. இதற்காக ஒரு மருத்துவமனை தேவைன்னு ஏக்கத்தில் இருக்கும் போது, கிருஷ்ணாபுரம் பகுதியில் தனியார் மருத்துவமனை ஒண்ணு தயாராகி வருவதாக பெருமை பேசுறாங்க.அந்த மருத்துவமனை கட்டப்பட்டு வரும் இடத்தில வில்லங்கம் இருப்பதாக பல கிளை கதைகள் சொல்றாங்க. போலி ஆவணங்கள் தயாரித்து லோன் வேறு பெற போவதாகவும் சொல்றாங்க.நேர்மையாக சொந்த நிலத்தில் கட்டடம் உருவாக்றதா இருந்தா வில்லங்கம் பல் இளிக்காது. ஆனால் அது பேர்ல பல புகார்கள் இருப்பதாலே, ஏற்கனவே மாவட்ட நிர்வாக ஆபிசர்கள் விசாரிச்ச இருக்காங்க. மருத்துவமனை அமைய போறதா பெருசா பில்டப் தராங்களே, பில்டிங் விவகாரம் ரொம்போ வீக்கா இருக்குதுன்னு சொல்றாங்களே, நிஜம் தானா?ஏமாந்தவர் மேலும் ஏமாறலாமா?பூங்கா நகரில் ஹென்னுார் சதுக்கத்தில் ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ என ‘பில்டர்’ ஒருத்தர் ஏற்படுத்தினாரு. கோல்டு சிட்டியின் இதய நிபுணரை டைரக்டர் என பட்டாபிஷே கம் செய்தார். ரொம்ப நல்லவங்கன்னு நம்பி மருத்துவ பணியை செய்து வந்த அவருக்கு, சல்லி காசும் சம்பளம் தராமல் காலத்தை ஓட்டியிருக்காங்க. சம்பளம் கேட்டு கேட்டு சோர்ந்து போனவர், அந்த மருத்துவமனையை விட்டு வேளியேறிட்டாரு. வெளியில் தமக்கு நேர்ந்த பாதிப்பை தற்போது சொல்லி வராரு. மத்தவங்களையும் உஷார் படுத்துறாரு. ஒருவரிடம் ஏமாற்றம் அடைந்த டாக்டர், மேலும் யாரிடமும் ஏமாறாமல் உஷாராக இருக்கணும். ஆனால், மேலும் ஏமாற தனியார் மருத்துவமனை இவரை காட்டி துவங்குறாங்க. அந்த மருத்துவமனையின் ஒரிஜினலை அவர் புரிஞ்சிக்கிட்டாரான்னு தெரியலையே!நுால் அறுந்த பட்டமாகுமா?அசம்பிளி பட்ஜெட் கூட்டம் முடிஞ்சி போச்ச. சும்மா ரெண்டு வருஷமா துாங்கிக்கிட்டிருந்த அரசு திட்டப் பணிகள் மும்முரமாக நடக்கணுமுன்னு கை கார விசுவாசிகள் அங்கலாய்கிறாங்க. அரசு ஒதுக்கிய நிதியில் தொகுதி வேலைகள் விறுவிறுப்பா நடக்க கான்ட்ராக்டர்கள் காட்டில் தான் செம மழை.தொகுதி அசம்பிளி மேடம், நான்கு ஆண்டுகளாக கோல்டு சிட்டியை பிக்னிக் சென்டர் போல நினைச்சு வந்து போனாங்க. அடுத்த தேர்தலுக்கு இருப்பதோ ஒரு வருஷம். அதனால் தொகுதியில் தங்கி கவனம் செலுத்தினால் தான், அடுத்த முறை அசம்பிளிக்கு போக முடியும்னு சொல்றது கிளி ஜோஷ்ய தகவல் அல்ல. பல கை கார விசுவாசிகளின் சொல்ல துடிக்கிற வார்த்தைகளாம்.கிராமத்து விவசாய விளைபொருள் கூட்டுறவுச் சங்க தேர்தல் முடிவை மேடம், நினைத்து பார்க்கணும்.அலட்சியமாக இருந்தால், மாநிலத்தில் நம்பியுள்ள இந்த ஒரு தொகுதியும் நுால் அறுந்த பட்டமாகிடும்னு கை காரர்களின் பேச்சாக இருக்குது!

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.