புதுடெல்லி: இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் தனியார் மருத்துவமனை, முகாம்களில் பூஸ்டர் டோஸ் போடப்பட உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. 2 டோஸ் தடுப்பூசி போட்டு முடித்து விட்ட 60 வயதுக்கு மேற்பட்டோர், முன்களப் பணியார்கள், சுகாதார பணியாளர்களுக்கு தற்போது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் நாளை முதல் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என ஒன்றிய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக நேற்று அது வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தனியார் மருத்துவமனைகள், தனியார் தடுப்பூசி மையங்களில் 10ம் தேதி முதல் (நாளை) பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும். அதே நேரம், அரசு மையங்கள் மூலமாக தகுதி வாய்ந்தவர்களுக்கு இலவசமாக முதல், 2வது டோஸ் செலுத்துவது மற்றும் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு அரசு மையங்களில் இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதும் தொடரும்,’ என்று கூறப்பட்டுள்ளது. * 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும். பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்வதற்கு தகுதி வாய்ந்தவர்கள்.1,109 பேருக்கு புதிய பாதிப்பு* நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் புதிதாக 1,109 பேர் பாதித்துள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்ைக 4,30,33,067 ஆக அதிகரித்துள்ளது. *புதிதாக 43 பேர் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளனர். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 5,21,573 ஆக உயர்ந்துள்ளது.* சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 11,492 ஆக குறைந்துள்ளது.