தமிழகத்தில் காலி மனை வரியும் 100% உயர்வு: நகராட்சி நிர்வாக இயக்குநர் சுற்றறிக்கையில் தகவல்

சென்னை: சொத்து வரி உயர்வைத் தொடர்ந்து காலி மனை வரியும் 100% சதவீதம் உயர்த்தியுள்ளது, நகராட்சி நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

தமிழகம் முழுவதும் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தக் கட்சிகள் சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டன.

இந்நிலையில், காலி மனை வரியும் 100 சதவீதம் உயர்த்தப்பட்டிருந்தது நகராட்சி நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா அனைத்து நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “காலி மனை வரிவிதிப்பை பொறுத்தவரையில் 100 சதவீதம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால், சொத்து வரி சீராய்வு நடைமுறைகள் முடிவுக்கு வரும் வரை புதிதாக பெறப்படும் காலி மனை வரி விதிக்க கோரும் விண்ணப்பங்களை உரிய விதிகளை பின்பற்றி பரிசீலனை செய்து பல்வகை ரசீது தற்காலிகமாக வழங்கலாம்.

எனவே, சீராய்வு பணிகள் முடிவுற்றவுடன் புதிய வரி விகிதங்களின்படி வரி விதிப்பு செய்தல் வேண்டும் எனவும், அவ்வாறு கணக்கீடு செய்த தொகை வரி விதிப்பு கேட்பு தொகையை, ஏற்கெனவே வைப்புத் தொகையாக வசூலிக்கப்பட்ட தொகையினை ஈடுசெய்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்து கொள்ளப்படுகிறது” என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, சொத்து உரிமையாளர்களை 4 பிரிவாக பிரித்து 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை சொத்து வரி உயர்வை தமிழக அரசு அறிவித்தது. அதாவது, 600 சதுரஅடி பரப்பளவு வரை, 601 முதல் 1,200 சதுரஅடி வரை, 1,201 முதல் 1,800 சதுரஅடி வரை, 1,800 சதுர அடிக்குமேல் என 4 வகையாக பிரித்து சொத்து வரி மதிப்பிடப்படுவதாகவும், சென்னை மாநகராட்சியில் இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர 20 மாநகராட்சிகளில் 88 சதவீத சொத்துகள் 1,200 சதுர அடிக்கும் குறைவாக இருப்பதால் இந்த வரி உயர்வு மக்களுக்கு பெரிய பாதிப்பை தராது என்றும் அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், வரி உயர்வுக்கு சொத்து உரிமையாளர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்புதெரிவித்துள்ளனர். உரிமையாளர்கள், வரி உயர்வை காரணம் காட்டி வாடகையை எவ்வளவு உயர்த்துவார்களோ என்ற அச்சம் குடியிருப்போர், வாடகை கடைக்காரர்களுக்கு ஏற்பட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.