தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மாணவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வகுப்பறையில் போதைப் பொருளான குட்கா சாப்பிட்டு கொண்டிருந்ததாக தெரிகிறது.
இதனைப் பார்த்த ஆசிரியர் மாணவனை அழைத்து அறிவுரை வழங்கியுள்ளார். மேலும் மாணவனின் இந்த செயலைக் குறித்து அவனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் மாணவனின் பெற்றோர் அவரை கண்டித்து புத்திமதி கூறி உள்ளனர்.
இந்த காரணத்தினால் மாணவன் மனம் உடைந்து இரண்டு நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் யாரிடமும் பேசாமல் வீட்டிலேயே இருந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவன் எலி பேஸ்ட்டை தின்றுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து மயங்கி விழுந்துள்ளார்.
இதை கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக மாணவனை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் தொடர்ந்து மாணவனுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.