தைவான் நாட்டில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தைவான் கடற்கரை அருகே 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் நேற்று இரவு 11.36 மணியளவில் ஹெங்சுன் நகருக்கு தென்கிழக்கே 44 கிலோமீட்டர் தொலைவில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் மையம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. தைவான் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் தொடர்ந்து பாதிக்கப்படும் ‘நெருப்பு வளையம்’ எனப்படும் நில அதிர்வுச் செயலில் உள்ள மண்டலத்தில் அமைந்துள்ளது.
முதல் கறுப்பின பெண் நீதிபதி
அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டின் முதல் கறுப்பின பெண் நீதிபதியாக கேடான்ஜி பிரவுன் ஜாக்சன் பதிவியேற்க உள்ளது உறுதியானது.
கறுப்பின பெண்ணான கேடான்ஜி பிரவுன் ஜாக்சன் என்பவரை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதிய நீதிபதியாக நியமிக்க ஒப்புதல் அளித்தார்.
தற்போது 51 வயதாகும் கேடான்ஜி பிரவுன் ஜாக்சன், ஓய்வு பெறப்போகும் 83 வயது நீதிபதி ஸ்டீபன் பிரேயர் என்பவருக்கு பதிலாக களமிறக்கப்பட்டுள்ளார். ஜாக்சன் சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்ற உள்ள மூன்றாவது ஆப்பிரிக்க-அமெரிக்கர் ஆவார். ஆனால் முதல் கறுப்பினப் பெண்.
கறுப்பினத்தவர்களில் முதன்முறையாக துர்குட் மார்ஷல் என்பவர் 1967 முதல் 1991 வரை அமெரிக்காவின் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றினார். அவரை தொடர்ந்து கிளேரன்ஸ் தாமஸ் பதவி வகித்தார்.
முன்பு ராணுவ வீரர்… இப்போ துறவி!
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கொழும்பு நகரில் சிலோன் வங்கிக்கு முன்பு ஒரு பெளத்த மத துறவி கையில் ஸ்டீல் கிண்ணத்தை வைத்துக் கொண்டு அங்கு வருபவர்களுக்கு ஆசி வழங்கி வந்தார்.
அவர் யார் என்று கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். அவர் பெயர் சுகதா சாரா. கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் இலங்கை ராணுவத்தில் பணிபுரிந்திருக்கிறார்.
குறிப்பாக, உள்நாட்டு போர் நடைபெற்றபோது விடுதலை புலிகளுக்கு எதிராக சண்டையிட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் கொல்வது என்பது எந்த வகையில் பிரயோஜனமில்லாதது என்பதை உணர்ந்ததாக கூறும் அவர், மக்களுக்கு உதவி செய்வதற்காக துறவு பூண்டதாக தெரிவித்தார்.
இஸ்ரேலில் துப்பாக்கிச் சூடு
இஸ்ரேல் நாட்டின் பரபரப்பான டெல் அவிவ் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 2 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் டவுன்டவுனில் நேற்று இரவு பல பார்கள் மற்றும் உணவகங்கள் நிறைந்த பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 6 பேர் காயமடைந்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான நோக்கம் உடனடியாகத் தெரியவில்லை, ஆனால் பாலஸ்தீனியர்களால் நடத்தப்பட்ட தொடர்ச்சியான கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து அதிக பதட்டங்களுக்கு மத்தியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil